முன்னாள் ராணுவ வீரரை தாக்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து கடலாடி அருகே கிராம மக்கள் கருப்பு கொடியுடன் தேர்தல் புறக்கணிப்பு செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே ‘சவேரியார் பட்டினம்’ கிராமத்தைச் முன்னாள் ராணுவ வீரர் ‘குழந்தை’ என்பவர் தொழிலுக்காக அருகே உள்ள மாரந்தை கிராமத்திற்கு தனது ஜேசிபி இயந்திரத்துடன் சென்றபோது ஆப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் முருகானந்தம் என்பவரின் ஆதரவாளர்கள் 10 பேர் கொண்ட கும்பல் முன்னாள் ராணுவ வீரர் குழந்தையை அரிவாள், கம்பு உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கியதில் படுகாயமடைந்த அவர், தற்போது மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், தாக்குதலுக்கு உள்ளான குழந்தை இளஞ்செம்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் மீது காவல்துறையினர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், முருகானந்தம் என்பவரது உறவினர்கள் காவல் நிலையத்தில் பணிபுரிவதால் ‘குழந்தை’ கொடுத்த புகாரில் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று சவேரியார்பட்டிணம் கிராம மக்கள் கருப்புக்கொடியுடன் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து முதுகுளத்தூர் டிஎஸ்பி ‘சின்ன கண்ணு’ கிராமங்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஆனால், பேச்சுவார்த்தையில் எந்தவித பலனும் எட்டாத நிலையில், கிராம மக்கள் கிராமத்துக்குள்ளேயே அமர்ந்து தேர்தல் புறக்கணிப்பதாக கூறி பதாகைகளையும் கருப்பு கொடியுடனும் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், "குழந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் முருகானந்தம் உட்பட நான்கு பேரும் மீது கொலை முயற்சி உள்ளிட்ட ஐந்து பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இருந்தாலும் பொதுமக்கள் அவர்களை கைது செய்தால் மட்டுமே தேர்தல புறக்கணிப்பிலிருந்து வாபஸ் பெறுவோம் என்று கூறி வருகின்றனர்" எனத் தெரிவித்தனர்.
ஐந்து கட்டங்களாக நடக்கும் இந்திய மக்களவைத் தேர்தலில், முதல் கட்டமாக நாளை தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இந்த கிராமத்தினர் தேர்தல் புறக்கணிப்பு அறிவித்துள்ளதால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்படுகிறது.