ஆப்பிரிக்காவில் 4 பேருடன் காரைப் பந்தாடிய யானையின் வீடியோ வைரலாகி வருகிறது. தென்னாப்பிரிக்காவில் உள்ளது சிமாங்கலிஸோ பூங்கா.


இந்தப் பூங்காவில் வன விலங்குகளைக் காணச் சென்ற 4 பேர் கொண்ட குடும்பம் ஒரு எஸ்யுவி ரக காரில் பயணித்தது. அப்போது எதிரே தென்பட்ட ஒரு யானை சீற்றத்துடன் அந்தக் காரை மோதியது. தலைகீழாகக் காரைப் புரட்டிப்போட்டு இரண்டு முறை மோதியது. 


அப்போது தூரத்தில் நின்றிருந்த வேறு சில கார்கள் சத்தமாக ஒலிப்பானை அழுத்தி ஓசை எழுப்ப யானையின் கவனம் திசைமாறியது.


இந்த வீடியோவை ஜூலுலாண்ட அப்ஸர்வர் என்ற செய்தி சேனல் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டது. ஜனவரி 16 ஆம் தேதியன்று இந்த வீடியோ அப்லோட் செய்யப்பட்டது. அதிலிருந்து இந்த வீடியோவை ஆயிரக்கணக்கானோர் பார்த்துள்ளனர். வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


யானை புரட்டிப் போட்ட அந்தக் காரில் இரண்டு குழந்தைகளும் இருந்துள்ளனர். அதில் ஒரு குழந்தைக்கு வயது 8 மற்றொரு குழந்தைக்கு வயது 10 எனத் தெரிகிறது.


சில நிமிடங்களில் அந்தக் காரில் இருந்த குடும்பத்தினர் சாவின் விளிம்பிற்கே சென்று திரும்பினர். மற்ற கார்கள், வாகனங்கள் எழுப்பிய ஒலியால் அங்கிருந்து சென்றது.



தகவலறிந்து சில ரேஞ்சர்கள் அங்கு வந்தனர். ஆனால் அதற்குள் யானை அங்கிருந்து சென்றிருந்தது.
அங்கு நடந்ததைப் பற்றி ஒரு ரேஞ்சர் கூறும்போது, "அந்தக் குடும்பமே பீதியில் உறைந்து போயிருந்தது. அவர்கள் காருக்குள் முடங்கி, ஒடுங்கியிருந்தனர். எங்கே யானை திரும்பி வந்து காரை மிதித்து நசுக்கிவிடுமோ என அஞ்சினர். நல்லவேளையாக அந்த யானை தந்தத்தால் காரின் பக்கவாட்டில் குத்தி மோதவில்லை. அப்படிச் செய்திருந்தால் நிச்சயமாக உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும்" என்றார்.


இது போன்று சிங்கங்கள் சஃபாரி சென்ற பார்வையாளர்களை துரத்திய சம்பவம் போன்ற சில சம்பவங்களை நாம் வாட்ஸ் அப் வீடியோக்களில் பார்த்திருப்போம்.


விலங்குகள் நாம் வாழும் உலகில் காணக் கிடைக்கும் அற்புதங்கள். வனம் அவற்றின் வசிப்பிடம். நாம் அங்கே செல்லும்போது அதன் வீட்டின் மாண்பினை உணர்ந்து செயல்பட்டால் இயற்கையின் படைப்பான அவற்றை ரசித்து வரலாம். 


அதனால் தான் தேசிய வன உயிரியல் பூங்காக்கள் பலவற்றிலும், கேமோஃப்ளாஜ் உடை எனப்படும் உடைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. உணவுப் பொருட்கள் கொண்டு செல்லக் கூடாது, பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்லக்கூடாது, புகைப்படம் எடுக்கக்கூடாது, முக்கியமாக சத்தம் எழுப்பக் கூடாது என்ற கண்டிப்புகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. வனத்தை ரசிக்க சில ஒழுக்கம் அவசியம்.