இயக்குநர் வசந்தபாலன் இயக்கியிருக்கும் அநீதி படத்தின் டிரைலர் வெளியாகியுள்ள நிலையில் படம் குறித்து அவர், என்ன சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார் என்று பார்க்கலாம்.


எமோஷனல் டிராமா கலந்த த்ரில்லர் அநீதி


வழக்கமாகவே வசந்தபாலனின் படங்கள் என்றால் அவை எளிய மனிதர்களைப் பற்றிய மிக எமோஷனலான டிராமாக இருக்கும் ஆனால் இந்த முறை அவர் இயக்கியிருக்கும்  அநீதி திரைப்படம் ஒரு த்ரில்லர் ஜான்ராவில் எடுக்கப்பட்டிருக்கிறது.


இது குறித்து வசந்தபாலன் இப்படி கூறியிருக்கிறார். “நான் த்ரில்லர் படங்களை விரும்பி பார்ப்பவன். குறிப்பாக அல்ஃபிரட் ஹிட்ச்காக் அவரது படங்களை நான் விரும்பிப் பார்ப்பேன். அவர் எழுதிய கதைகளைப் படித்திருக்கிறேன். அநீதி படத்தின் கதையை ஒரு புதிய முறையில் சொல்ல வேண்டும் என்கிற எண்ணம் எனக்கு வந்தது. அதனால் நான் அந்த கதையை த்ரில்லராக எடுக்க முடிவு செய்தேன். ஆனால் நான் எப்போதும் எளிய குடும்பங்களில் இருக்கும் உணர்வுப்பூர்வமான கதைகளை இயக்க விரும்புவன். அதனால் ஒரு த்ரில்லரை ஏன் எமோஷனல் டிராமாவாக சொல்லக் கூடாது என்று  நான் யோசித்தேன். இந்த இரு வகைமைகளை வைத்து ஒரு புதிய முயற்சியாக அநீதி படத்தை இயக்கியிருக்கிறேன்.”


ஒரு விளம்பரத்தைப் பார்த்துதான் அநீதி படம் உருவானது


அநீதி படத்தின் கதை உருவாவதற்கு எத்தனையோ காரணங்களை நாம் கற்பனை செய்யலாம். ஆனால் இந்தக் கேள்விக்கு வசந்தபாலன் கொடுத்திருக்கும் பதில் கொஞ்சம் ஆச்சரியம் தரக்கூடியதாக இருக்கிறது. “அநீதி  படத்தின் கதையை எழுத வேண்டும் என்று தனக்கு முதல் முதலாக தோன்றியது தொலைக்காட்சியில் ஒரு பிரபலமான சாக்லெட் விளம்பரத்தைப் பார்த்துதான். அந்த விளம்பரத்தை நாம் அனைவரும்  நிச்சயம் பார்த்திருப்போம். ஒரு வயதான பாட்டி ஒரு இடத்தில் அமர்ந்திருக்கிறார் அவருக்கு அருகில் ஒரு இளைஞன் நின்று சாக்லெட் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். அந்த பாட்டியில் கைத்தடி அருகில் விழுந்திடவே அந்த இளைஞனிடம் உதவி கேட்கிறார். ஆனால் அந்த இளைஞனோ எதுவும் செய்யாமல் சாக்லெட் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்.


வேறு வழியில்லாமல் அந்த பாட்டி தானே எழுந்து அந்த கைத்தடியை எடுக்கிறார். மிகச்சரியாக அவர் எழுந்ததும் அவர் அமர்ந்திருந்த இடத்தில் ஒரு பியானோ வந்து விழுகிறது. தனது உயிரைக் காப்பாற்றியதற்காக அந்த பாட்டி அந்த இளைஞனுக்கு நன்றி தெரிவிக்கிறார். இந்த விளம்பரம் தனக்குள் நிறையக் கேள்விகளை எழுப்பியது என்பதால் இதனை மையமாக வைத்து ஒரு கதையை எடுக்க முடிவு செய்ததே இன்று அநீதி  படம் உருவாகியதற்கு காரணம். ஒரு படம் உருவாவதற்கு இவ்வளவு சின்ன விளம்பரம் போதுமானதாக இருக்கிறதே”


அநீதி


அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் படம் அநீதி. வசந்தபாலன் இயக்கி ஜி.வி பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். வருகின்ற ஜூலை 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது அநீதி