வேட்டையன்


ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் நாளை அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. த.செ.ஞானவேல் இயக்கியுள்ள இப்படத்தில் அமிதாப் பச்சன் , ஃபகத் ஃபாசில் , மஞ்சு வாரியர் , ரித்திகா சிங் , துஷாரா விஜயன் , ரானா டகுபடி , கிஷோர் , அபிராமி , விஜய் டிவி ரக்‌ஷன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. தமிழ் , தெலுங்கு , இந்தி , மலையாளம் , கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இப்படம் வெளியாக இருக்கும் நிலையில் தெலுங்கு ரசிகர்களிடம் வேட்டையன் படத்தின் டைட்டிலை மாற்றச் சொல்லி கோரிக்கை எழுந்துள்ளது.


வேட்டையன் டைட்டில் மாற்றச் சொல்லி கோரிக்கை


தமிழ் மொழியில் வெளியாகும் படங்களுக்கு தெலுங்கு ரசிகர்களிடமும் தெலுங்குவில் வெளியாகும் படங்களுக்கு தமிழ் ரசிகர்களிடமும் சிறப்பான வரவேற்பு இருந்து வருகிறது. இந்த ஆண்டு தமிழில் வெளியான மகாராஜா , தி கோட் , கார்த்தியின் மெய்யழகன் ஆகிய படங்கள் தெலுங்கு மொழி பேசும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டன. தற்போது ரஜினியின் வேட்டையன் படத்திற்கும் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பெரியளவில் வரவேற்பு இருந்து வருகிறது. 


தமிழ் படங்கள் தெலுங்கு மொழிக்கு டப்பிங் செய்யப்பட்டு வெளியாகும்போது ஒரு சில படங்களின் டைட்டிலும் மாற்றப்பட்டே வெளியாகின்றன. மெய்யழகன் படம் கூட சத்யன் சுந்தரம் என்கிற பெயரில் வெளியானது. வேட்டையன் படத்தைப் பொறுத்தவரை தமிழ் , தெலுங்கு இரு மொழியிலும் ஒரே டைட்டிலில் படம் வெளியாக இருக்கிறது. இதனால் ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளார்கள். " வேட்டையன் என்கிற வார்த்தைக்கு அர்த்தமே தெரியாது. தெலுங்கு ரசிகர்களை கணக்கில் கொண்டு குறைந்தபட்சம் ஆங்கிலத்தில் Hunter  என்றுகூட டைட்டில் வைத்திருக்கலாம். தமிழ் படங்களுக்கு தெலுங்கு மொழி பேசும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது என்கிற ஒரே காரணத்தினால் எங்களை கிரண்டட் ஆக எடுத்துக் கொள்ள வேண்டாம்" என ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள். இன்னும் சிலர் " டைட்டிலில் என்ன இருக்கிறது. தமிழில் வேட்டையன் என்றால் தெலுங்கில் வேட்டகாடு. எல்லாம் திராவிட மொழிதானே" என்றும் படத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.






நாளை படம் வெளியாக இருக்கும் நிலையில் ரசிகர்களின் இந்த கோரிக்கையை படக்குழு பொருட்படுத்துமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.