நடிகர் தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் பட விழாவில் பெண் தொகுப்பாளினியிடம் அத்துமீறிய ரசிகர் ஒருவருக்கு அடி விழுந்தது. வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் தொகுப்பாளர் ஐஷ்வர்யாவை நெட்டிசன்ஸ் பாராட்டி வருகிறார்கள்.


தொடரி, பட்டாஸ்,மாறன் ஆகிய படங்களை தொடர்ந்து சத்யஜோதி நிறுவனம் தனுஷை வைத்து 4வது முறையாக தயாரித்துள்ள படம் “கேப்டன் மில்லர்”. இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். இப்படத்தில்  பிரியங்கா மோகன், சிவ்ராஜ் குமார், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இந்த படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகிறது. 


இதனிடையே சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் கேப்டன் மில்லர் படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் தொகுப்பாளினி ஐஸ்வர்யா ரகுபதியும் பங்கேற்றிருந்தார். இவர் கேப்டன் மில்லர் படத்தில் நடித்திருப்பதாக சொல்லப்படுகிறது. கட்டுக்கடங்காமல் இந்த விழாவில் தனுஷ் ரசிகர்கள் பங்கேற்றனர். அப்போது அவரிடம் அங்கு வந்திருந்த நபர் ஒருவர் அநாகரீகமாக முறையில் நடந்து கொண்டதாக கூறப்பட்டது.


இதனால் கோபமடைந்த ஐஸ்வர்யா அந்த நபரை, காலில் விழ வைத்து மன்னிப்பு கேட்க வைத்ததுடன், அடி வெளுத்தெடுத்தார். மேலும் ”செருப்பு பிஞ்சிரும், நடிக்கிறீயா, தப்பு பண்ணலைன்னா எதுக்கு ஓடுற” என கேட்கும் காட்சிகளும் அடங்கிய இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 


இதனிடையே இந்த வீடியோவை வைத்து அஜித், விஜய் ரசிகர்கள் ஒருவரையொருவர் சரமாரியாக சமூக வலைத்தளங்களில் கருத்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். அதேசமயம் என்ன நடந்தது என ஐஷ்வர்யா விளக்கம் அளித்துள்ளார். அதாவது, “அந்த கூட்டத்தில் சம்பந்தப்பட்ட ஒருவன் தன்னிடம் அநாகரீகமாக நடந்து கொண்டான். உடனடியாக அவனை பிடித்த நான்,  அடி கொடுக்கும் வரை விடவில்லை. ஆனால் அவன் என்னிடம் தப்பி ஓட முயன்றான். நான் ஓடிப்போய் விடாமல் பிடித்துக் கொண்டு கத்தினேன், அடித்தேன்.


ஒரு பெண்ணின் உடல் தொடும் அளவுக்கு துணிவு அவனுக்கு இருந்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதேசமயம் என்னைச் சுற்றி நல்ல மக்களும் இருந்தார்கள். எனக்கு தெரியும் இந்த உலகத்தில் இரக்கமுள்ள, மரியாதையுள்ள நபர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் இவனைப் போன்ற சிலரை பார்க்கும்போது தான் அச்சமாக உள்ளது” என தெரிவித்துள்ளார். 






முன்னதாக தொகுப்பாளினி ஐஸ்வர்யா ரகுபதி சில மாதங்களுக்கு முன் நடிகர் மன்சூர் அலிகான் நடித்த சரக்கு படத்தின் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அப்போது அந்நிகழ்வில் பங்கேற்ற நடிகர் கூல் சுரேஷ் அத்துமீறி ஐஸ்வர்யாவின் அனுமதியே இல்லாமல் அவருக்கு மாலை அணிவித்தது மிகப்பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியது. தொடர்ந்து பலரும் கூல் சுரேஷை ரசிகர்களும், இணையவாசிகளும் கடுமையாக வறுத்தெடுத்தனர். இதனைத் தொடர்ந்து, கூல் சுரேஷ் ஐஸ்வர்யா ரகுபதியிடம் மன்னிப்பு கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.