தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன் டீன் எல்கர், நேற்று கேப்டவுனில் தனது டெஸ்ட் வாழ்க்கையின் கடைசி இன்னிங்ஸை விளையாடினார். இந்தியாவுக்கு எதிரானது இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இரண்டு முறை பேட்டிங் செய்ய வந்த டீன் எல்கர் சொற்ப ரன்களில் வெளியேறினார். முதல் இன்னிங்ஸில் 4 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 12 ரன்களும் எடுத்தார்.
இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட டீன் எல்கர் தனது கடைசி இன்னிங்ஸில் 28 பந்துகளில் 2 பவுண்டரிகள் உதவியுடன் முகேஷ் குமார் பந்தில் விராட் கோலி கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். எல்கர் அவுட் ஆகி பெவிலியன் திரும்ப தொடங்கியபோது, இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி அவருக்கு ஒரு மறக்கமுடியாத பிரியாவிடை கொடுத்தார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், கோலி டீன் எல்கரை கட்டிப்பிடித்தது மட்டுமின்றி மற்றொரு செயலால் அனைவரது மனதையும் வென்றார். எல்கருக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஸ்டேடியத்தில் இருக்கும் பார்வையாளர்களை வணங்குமாறு கோலி கேட்டு கொண்டார். இதையடுத்து, ஸ்டேடியத்தில் இருந்த பார்வையாளர்கள் கைதட்டலுடன் எல்கருக்கு பிரியாவிடை கொடுத்தனர்.
இந்தியாவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டிகள் முன்னதாகவே எல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.
டீன் எல்கரின் கிரிக்கெட் வாழ்க்கை:
2012ல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான டீன் எல்கர் இதுவரை 86 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 14 சதங்கள் மற்றும் 23 அரைசதங்களுடன் 5347 ரன்கள் எடுத்துள்ளார். அதேபோல், இதுவரை 8 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 104 ரன்கள் எடுத்துள்ளார்.
முதல் நாள் ஆட்டநேர முடிவு:
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளான நேற்று மொத்தம் 23 விக்கெட்கள் வீழ்ந்தன. கடந்த டெஸ்ட் போட்டியில் சதமடித்து ஆட்டநாயகன் விருந்து வென்ற கேப்டன் டீன் எல்கர், இந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்கா அணி 55 ரன்களுக்குள் ஆட்டமிழந்தது. இந்திய அணி சார்பில் முகமது சிராஜ் வெறும் 15 ரன்களை மட்டும் விட்டுகொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்தினார்.
அடுத்ததாக முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, 153 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டை இழந்தது. இதன்மூலம், இந்திய அணி 98 ரன்கள் முன்னிலை பெற்றது. முதல் நாள் ஆட்டநேர முடிவில், தென்னாப்பிரிக்கா இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்பிற்கு 62 ரன்கள் எடுத்துள்ளது. எய்டன் மார்க்ரம் 36 ரன்களுடனும், டேவிட் பெடிங்காம் 7 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.