வெளிநாட்டு சொகுசு காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்ட நடிகர் தனுஷ் வழக்கில் நாளை உத்தரவு பிறக்கப்பட உள்ளது. ஏற்கெனவே நடிகர் விஜய் கார் வரிவிலக்கு கேட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ்.சுப்பிரமணியம் உத்தரவு பிறப்பிக்கிறார்.


கடந்த 2015ஆம் ஆண்டு காருக்கு நுழைவு வரி ரூ.60.66 லட்சம் செலுத்த வணிகவரித்துறை உத்தரவிட்டதை எதிர்த்து தனுஷ் வழக்கு தொடர்ந்திருந்தார். 50 சதவீதம் வரி செலுத்தினால் காரை பதிவு செய்ய ஆர்டிஓ அலுவலகத்துக்கு 2015ஆம் ஆண்டு அக்டோபரில் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ரூ.30.33 லட்சம் வரி செலுத்தியதாக தனுஷ் கூறியதால் விதிகளை பின்பற்றி பதிவு செய்ய 2016ஆம் ஆண்டு ஏப்ரலில் உத்தரவிடப்பட்டது. 


இறக்குமதி வாகனங்களுக்கு நுழைவு வரி விதிக்க தடை விதித்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் போடப்பட்டுள்ளன. கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்த வழக்கில் உச்சநீதிமன்றம், நுழைவு வரி வசூலிக்க மாநில அரசுகளுக்கு  அதிகாரம் உள்ளது என்று கடந்த 2019ஆம் ஆண்டு தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.




நடிகர் தனுஷ், கடந்த 2015ஆம் ஆண்டு விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கியிருக்கிறார். கருப்பு நிறத்தில் உள்ள இந்த காரின் விலை மதிப்பு சுமார் 6 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. ஆனால், ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கியது தொடர்பாக தனுஷ் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. இதனைத்தொடர்ந்து, கடந்த 2017ஆம் ஆண்டு ஃபோர்டு மஸ்டாங் ஜிடி ஸ்போர்ட்ஸ் காரை தனுஷ் வாங்கியுள்ளார். இந்த காரையும் தனுஷ் கருப்பு நிறத்தில் வாங்கியிருக்கிறார். இதுதொடர்பான புகைப்படங்கள் தனுஷ் டீம் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்போது வெளியிடப்பட்டன.




விஜய் காரின் அபராதம் வழக்கு விவரம்:


வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி செலுத்தாத விவகாரத்தில் அபராதம் கட்ட தயாராக இல்லை என்று நடிகர் விஜய் கூறினார். அபராதம் செலுத்திவிட்டு அறிக்கை தர உத்தரவிட்ட வழக்கு விசாரணைக்கு வந்தபோது விஜய் தரப்பு விளக்கமளித்திருந்தது.


சொகுசு காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்டு நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கு ஜூலை 28ஆம் தேதி தனி நீதிபதி அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. ரூ.1 லட்சம் அபராதத்தை ஏன் கொரோனா நிவாரணமாக வழங்கக்கூடாது என நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது, அபராதமாக விதிக்கப்பட்ட ரூ.1 லட்சத்தை நிவாரண நிதியாக கொடுக்க விருப்பமில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜய் தரப்பு தெரிவித்துள்ளது. கடந்தாண்டு ஏற்கெனவே கொரோனா நிவாரண நிதியாக அரசுக்கு ரூ.25 லட்சம் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்த காருக்கு சொகுசு வரி செலுத்த தடைகோரிய விஜய் வழக்கு முடித்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.