அன்புள்ள விஜய் அண்ணா,


நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். நலம் சூழவே வேண்டுகிறேன். நான் ஒரு தீவிர அஜித் ரசிகன். அஜித்தை பிடிக்கும் என்பதால் விஜயை பிடிக்கக் கூடாதா? உங்களுக்கு கடிதம் எழுதக்கூடாதா? ஒரு தீவிர அஜித் ஃபேன் உங்கள் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறக்கூடாதா என்ன? தல-தளபதி தானே இன்றைய தமிழ்ச்சினிமாவின் இரட்டைக்குழல். பொதுவாக கைநீட்டி ஒரு நண்பர் கூட்டத்தை குறிப்பிட்டால் அதில் விஜய், அஜித் ரசிகர்கள்தான் அதிகம். நான் தல ஃபேன், என் பிரண்ட் தளபதி ஃபேன் என்பார்கள். நண்பர்கள், குடும்பம் என அனைத்திலும் இருவரும்தான் கலந்திருக்கிறீர்கள்.




ஆனால் இந்த சோஷியல் மீடியா வேறு விதமாக மடைமாற்றி வைத்திருக்கிறது. ரசிகர் சண்டைகளால் சந்திசிரிக்கும் ட்விட்டரை உங்கள் கவனத்துக்கு வராமல் இருக்காது. ஆனால் அதற்கெல்லாம் கவலை படாதீர்கள். வருத்தம் கூட வேண்டாம். அதிலெல்லாம் பங்கெடுத்து பிதற்றிக்கொண்டிருப்பது சில ஆஃப்பாயில் ரசிகர்கள் தான். தலயின் உண்மை ரசிகரோ, உங்களது தீவிர ரசிகரோ அங்கெல்லாம் போவதே இல்லை. தல-தளபதிக்கு  இடையேயான அன்பும், நட்பும் உண்மை ரசிகர்களுக்கு தெரியாமல் இல்லை. அவர்கள் எல்லாம் அமைதியாகவே இருக்கிறார்கள். சில அரைகுறைகள் தான் துள்ளிக்கொண்டு இருக்கிறார்கள். அது சரி, நான் உங்களுக்கு சொல்லவேண்டுமா என்ன? 'இக்னோர் நெகட்டிவிட்டி' என சொல்லிக்கொடுத்ததே நீங்கள்தான்.


உங்களுக்கு தெரியுமா? நீங்கள் ஆடியோ லாஞ்ச் சமயங்களில் பேசும் பேச்சுகள் எனக்கு அவ்வளவு பிடிக்கும். உங்களது ஆடியோ லாஞ்சுக்கு காத்திருக்கும் நேரம் சில நண்பர்கள் என்னை கிண்டல் செய்வதும் உண்டு. ஏனென்றால் நான் அஜித் ஃபேனாம். நம்மை செதுக்கும் வார்த்தைகள் யாரிடம் இருந்து வந்தால் என்ன?  எனக்கு மட்டுமல்ல, பொதுவாக அனைவருமே உங்களிடம் ரசிப்பது என்ன தெரியுமா? உங்கள் உடல்வாகு.  நான் டிவியில் படம் பார்த்து புரிய தொடங்கிய காலத்தில் குஷியைப் பார்த்தேன். அதுபோலத்தான் இப்போதும் நீங்கள் இருக்கிறீர்கள். குஷி, ப்ரண்ட்ஸ் மாதிரியான படங்களை எல்லாம் ரசிகர் என்ற எல்லையின்றி நாங்கள் அனைவருமே ரசிப்போம். ரசிக்கிறோம்.




பிரம்மாண்டங்களான தல, தளபதி பிரமாண்டங்களாக மட்டுமே இருந்துவிடவேண்டாம் . மலையாள சினிமாக்களில் சூப்பர் ஸ்டார்கள் எதார்த்த சினிமாக்களில் வந்து போகிறார்கள். அந்த நிலையை நீங்களும் கொண்டு வர வேண்டும். 'நேர்கொண்ட பார்வை'யை ஒரு தொடக்கமாக நான் நினைத்துக்கொள்கிறேன். தல-தளபதி படம் என்றால் இப்படித்தான் இருக்கும் என்ற விதியை ரசிகர்களுக்குள் இருவருமே கொண்டுவராமல் பயணிப்பது நல்லதுதானே. உங்களுக்கு தெரியாததா? ரசிகர்களை குழிப்படுத்த குழிப்படுத்த என நினைத்து நினைத்து மாஸ் மசாலாவுக்குள்ளேயே சென்றுவிடுகின்றனர் சில நல்ல இயக்குநர்கள். அதற்கு இனிமேலும் நீங்கள் வழிவிடாதீர்கள்.


ஆமாம், உங்களது அரசியல் நகர்வு எந்த நிலையில் இருக்கிறது? என் நண்பன் உங்களது தீவிர ரசிகன் ஒருவன் உங்கள் அரசியல்  வருகைக்காக காத்திருக்கிறான். இன்னொரு தீவிர ரசிகன் ஒருவனுக்கு அரசியல் வேண்டாமாம். நீங்கள் திரையில் இருந்தாலே போதுமென்கிறான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனநிலை. உங்கள் மனநிலை என்ன? எதுவாக இருந்தாலும் யோசித்து தீர்க்கமாக இறங்குங்கள். உங்களது எந்த முடிவையும் ஏற்றுக்கொள்ளும் ரசிகர் கூட்டம் உங்களுக்கு உண்டு. பின்பு என்ன? அனைவருக்கும் இருக்கும் ஆசைதான் எனக்கும். தல-தளபதி சேர்ந்து ஒரு படத்தில் நடிக்கவேண்டும். எதார்த்த சினிமாவுக்குள் நீங்கள் செல்லும் நேரம் அது சாத்தியப்படும் என்றே நினைக்கிறேன். இன்றைய தமிழ் சினிமாவின் முகங்களாகவே இருக்கிறீர்கள் நீங்களும், அஜித்தும். நல்ல படங்களை கொடுங்கள். மொழியும், கலையும் உங்களால் முன்னேறட்டும். பிறந்தநாள் வாழ்த்துகள் தளபதி.


இப்படிக்கு,
தல ரசிகன்.