'வந்தாய் அய்யா'- 25 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் நிகழ்ந்தது தாதா கங்குலியின் லார்ட்ஸ் சதம்..!

1996-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22ஆம் தேதி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் முதல் சதத்தை பதிவு செய்தார்.

Continues below advertisement

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகச் சிறந்த வீரர்களில் ஒருவர் சவுரவ் கங்குலி. தன்னுடைய அதிரடி ஆட்டத்தாலும் ஆக்ரோஷமான செயல்பாடுகளாலும் பலரையும் ஈர்த்தவர் கங்குலி. கிரிக்கெட் ரசிகர்களால் ‘தாதா’ என்று செல்லமாக அழைக்கப்படுபவர். 1992ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான சர்வதேச ஒருநாள் போட்டியில் முதல் முறையாக கங்குலி களமிறங்கினார். ஆனால் அந்தப் போட்டியில் இவர் சிறப்பாக செயல்படவில்லை. மேலும் அந்தத் தொடரில் மற்ற வீரர்களுக்கு தண்ணீர் உள்ளிட்டவற்றை எடுத்து செல்ல மறுத்தார் என்ற புகாரும் எழுந்தது. 

Continues below advertisement

ஒரு கிரிக்கெட் வீரரின் தொடக்க காலத்திலேயே இவ்வாறு சர்ச்சை மற்றும் விமர்சனங்கள் எழுந்தது அவருக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. அதன்பின்னர் மீண்டும் ரஞ்சி கோப்பை போட்டிகளில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். இதன் காரணமாக 1996ஆம் ஆண்டு இங்கிலாந்து தொடரில் இவர் அணிக்கு தேர்வானார். அங்கு சென்ற இந்திய அணியின் பயிற்சி போட்டியில் களமிறங்கு 0 மற்றும் 70 ரன்கள் அடித்தார். எனினும் அவருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்காது என்று எதிர்பார்க்கப்பட்டது. 


இந்தச் சூழலில் இந்திய அணியின் பேட்ஸ்மேன் நவ்ஜோத் சிங் சித்து கேப்டன் அசாருதின் இடையே இருந்த கருத்து வேறுபாடு காரணமாக தொடரிலிருந்து திடீரென விலகினார். இதன் காரணமாக கங்குலிக்கு லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்தப் போட்டியில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 344 ரன்கள் குவித்தது. இதனைத் தொடர்ந்து இந்திய அணி முதல் இன்னிங்ஸில் களமிறங்கியது. விக்ரம் ராத்தோர் மற்றும் நயான் மோங்கியா தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 

விக்ரம் ராத்தோர் 15 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். இதனையடுத்து மூன்றாவது வீரராக சவுரவ் கங்குலி முதல் டெஸ்ட் இன்னிங்ஸில் களமிறங்கினார். அவர் களத்தில் இறங்குவதற்கு முன்பாக பலரும் விமர்சனங்களை முன்வைத்தனர். எனினும் அவை எதையும் பொருட்படுத்தாமல் இங்கிலாந்து பந்துவீச்சை எளிமையாக எதிர் கொண்டார். பவுண்டரி மழை பொழிந்தார். விரைவாக அரைசதம் கடந்து அசத்தினார். மறுபுறம் மற்ற வீரர்கள் தொடர்ந்து ஆட்டமிழந்து கொண்டிருந்தனர். அப்போது 6 விக்கெட்டிற்கு மற்றொரு அறிமுக வீரரான ராகுல் திராவிட் களமிறங்கினார். 


கங்குலி-திராவிட் ஜோடி 6ஆவது விக்கெட்டிற்கு 94 ரன்கள் சேர்த்தது. அத்துடன் தன்னுடைய முதல் டெஸ்ட்  போட்டியிலேயே முதல் சதத்தை கங்குலி பதிவு செய்து அசத்தினார். ஜூன் 22ஆம் தேதி 1996ஆம் ஆண்டு அந்த சாதனையை படைத்தார். 131 ரன்கள் எடுத்திருந்தப் போது கங்குலி முல்லாளி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ராகுல் திராவிட் 95 ரன்களில் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை 5 ரன்களில் தவறவிட்டார்.  இந்தப் போட்டிக்கு பிறகு சவுரவ் கங்குலி 113 டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கி 7212 ரன்கள் குவித்தார். அத்துடன் 16 சதம் மற்றும் 35 அரைசதம் விளாசினார். 



லார்ட்ஸ் போட்டியில் தன்னுடைய ஆட்டத்தின் மூலம் விமர்சனத்திற்கு பதிலளித்தார். அப்போது முதல் எப்போதும் தன்னுடைய ஆட்டத்தின் மீது விமர்சனம் வந்தால் அதற்கு களத்தில் தன்னுடைய ஆட்டம் மூலம் பதிலடி கொடுப்பதை வாடிக்கையாக வைத்திருந்தார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்பட்ட கங்குலி பல வெற்றிகளை பெற்று தந்தார். இந்தியாவிற்கு தலைசிறந்த கேப்டன்களில் ஒருவர்  கிடைக்க காரணமாக இருந்தது இந்தப் போட்டி தான். அதிலும் குறிப்பாக ஜூன் 22ஆம் தேதி தான் இந்திய கிரிக்கெட்டில் வரலாற்றில் மறக்க முடியாத நாளில் ஒன்று. இந்த நிகழ்வு நடந்து இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவடைகிறது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க: விடாத மழை... தொடாத பந்து... நான்காம் நாள் ஆட்டம் ரத்து!

Continues below advertisement
Sponsored Links by Taboola