தலிபான்கள் சூழ்ந்த ஆஃப்கானிஸ்தான் தற்போது மிகுந்த இறுக்கத்தில் உள்ளது. பெண்கள் வெளியே செல்லலாமா? உயிர் பாதுகாப்பாக இருக்குமா? புர்கா அணியாவிட்டால் என்னவாகும்? ஆண்கள் தாடி வளர்க்காவிட்டால் கொல்லப்படுவார்களா? ஸ்கூல் காலேஜ் போகலாமா கூடாதா என ஒவ்வொரு நிமிடமும் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டுள்ளார்கள் அந்த நாட்டு மக்கள். இதற்கிடையே ஆஃப்கானிஸ்தானின் அண்டை நாடான இந்தியாவும் இது தொடர்பான தனது எதிர்ப்பை பதிவு செய்து வருகிறது.பாலிவுட் கோலிவுட் என சினிமா ஸ்டார்களும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
இதற்கிடையே 2013 நடிகர் அமிதாப் பச்சன் எழுதிய ஃபேஸ்புக் பதிவு ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட அனைத்து சோஷியல் மீடியா தளங்களிலும் ஆக்டிவ்வாக இயங்கி வருபவர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன். சுமார் ஏழு வருடங்களுக்கு முன்பு தனது ஃபேஸ்புக் பதிவில் ஸ்ரீதேவியும் தானும் இணைந்து நடித்த ‘குதா கவ்வா’ என்னும் திரைப்படம் குறித்து பகிர்ந்திருந்தார் அமிதாப் பச்சன். 1992ல் வெளியான இந்த சூப்பர்ஹிட் திரைப்படம் ஆஃப்கானிஸ்தானில் படம் பிடிக்கப்பட்டது. ஆஃப்கானிஸ்தானில் சூட்டிங் நடைபெற்ற காலத்தில் நிகழ்ந்த சுவாரசிய சம்பவங்களைப் பகிர்ந்திருந்தார்.
’அந்தப் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க இருந்த நான் தயாரிப்பாளரின் நிர்பந்தத்தால் முழுப்படத்திலும் நடித்தேன். வெறும் ஆறுநாள் மட்டுமே கால்ஷீட் கொடுத்த நான் முழுப்படத்துக்கும் கால்ஷீட் என மாற்றினேன். படம் முழுக்க முழுக்க ஆஃப்கானிஸ்தானில் எடுக்கப்பட்டது. அதுவும் அங்கே அப்போது
போர் உச்சத்தில் இருந்த சமயம். ரஷ்யாக்காரர்கள் அப்போதுதான் நாட்டை விட்டு வெளியேறி இருந்தார்கள். ஆட்சி அதிபர் நஜிபுல்லாவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. நஜிபுல்லா வெறித்தனமான பாலிவுட் ரசிகர். அதனால் என்னையும் ஸ்ரீதேவியையும் சந்திக்க அவர் விரும்பினார். எங்களுக்கு ராஜ மரியாதை தரப்பட்டது நாட்டுக்கு வரும் விருந்தாளிகளின் கால் தரையில் படக்கூடாது என்பது அந்த நாட்டில் வழக்கம்போல. எங்களைப் பல்லக்கில் ஏற்றிச் சென்றார்கள். ஆஃப்கானிஸ்தான் முழுவதுமாக எங்களுக்குச் சுற்றிக்காண்பித்தார்கள். ஹோட்டலில் எங்களைத் தங்க வைக்கவில்லை. அதற்கு பதிலாக ஒரு குடும்பம் அவர்களது வீட்டை காலிசெய்து அந்த இடத்தில் எங்களைத் தங்க வைத்தார்கள். அவர்கள் வேறு ஒரு வீட்டுக்குத் தற்காலிகமாக மாறிக்கொண்டார்கள்.
துப்பாக்கி ஏந்திய வாகனங்களை சாலைகளில் கண்டோம். எங்களது ஷூட்டிங் குழுவை ஹெலிகாப்டரில் அழைத்துச் சென்றார்கள். அது மறக்கமுடியாத பயணம். வானத்திலிருந்து ஊதா நிற மலைகளைப் பார்க்க முடிந்தது, கசகசாக்கள் விளையும் பூமி ஆங்காங்கே ரத்தச் சிவப்பாகத் தெரிந்தது. நாங்கள் ஒரு அரண்மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். அங்கே புஷ்காஷி எனப்படும் ஆடு விரட்டும் போட்டி நாங்கள் பார்ப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரவு முழுக்க உணவு அருந்தினோம், குடித்தோம்.. எதோ ஒரு தேவலோகத்தில் இருப்பது போலத் தோன்றியது. எங்களுக்கு நிறைய பரிசுப்பொருட்களைக் கொடுத்தார்கள். இந்தியாவுக்குப் புறப்படுவதற்கு ஒரு நாள் முந்தைய இரவு அதிபர் அவரது இல்லத்துக்கு எங்களை அழைத்தார். அஃப்கானிஸ்தானின் ராணுவ மரியாதையை எங்களுக்கு அளித்தார். அவரது உறவினர் எங்களுக்காக இந்திய ராகம் ஒன்றைப் பாடிக்காட்டினார். அந்த மக்கள் தற்போது எங்கே எனத் தெரியவில்லை’ எனக் பதிவிட்டிருக்கிறார்.