உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த பிரபல பாலிவுட் காமெடி நடிகர் ராஜூ ஸ்ரீவஸ்தவாவுக்கு அமிதாப் பச்சன் இரங்கல் தெரிவித்துள்ளார். உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு, 41 நாள்கள் உயிருக்குப் போராடிய நகைச்சுவை நடிகர் ராஜூ ஸ்ரீவஸ்தவா கடந்த 21ம் தேதி உயிரிழந்தார். இந்த நிலையில், ராஜூவின் நகைச்சுவைப் பேச்சை நினைவு கூர்ந்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.


மற்றொரு சக ஊழியர், நண்பர் மற்றும் படைப்பாற்றல் மிக்க கலைஞர் நம்மை விட்டுப் பிரிந்துள்ளார். அவரது படைப்பாற்றல் நேரம் முடிவதற்குள்ளாகவே உலகை விட்டு சென்று விட்டார். அவருடைய டைமிங் சென்சும், பேச்சுவழக்கு நகைச்சுவையும் நம்மிடையே நிலைத்திருக்கும்.


"தனித்துவமான, வெளிப்படையான, நகைச்சுவை உணர்வை அவர் கொண்டிருந்தார்.  சொர்க்கத்திலிருந்து புன்னகைக்கும் அவர் மகிழ்ச்சிக்கான காரணியாக  கடவுளுடன் இருப்பார்" என்று தன் ப்ளாகில் அமிதாப் எழுதியுள்ளார்.


மேலும் முன்னதாக ராஜூ ஸ்ரீவஸ்தவாவின் உடல்நலனில் முன்னேற்றம் ஏற்பட அவரது குடும்பத்தினருக்கு வாய்ஸ் நோட் அனுப்பியதாகவும் அமிதாப் தெரிவித்துள்ளார்.


ராஜூ மருத்துவமனையில் போராடிய காலத்தில் அவரது உடல்நிலை தேற விரும்பி தான் வாய்ஸ் நோட் அனுப்பியதாகவும், ஒரு சந்தர்ப்பத்தில் தன் குரலைக் கேட்டு கண் விழித்து பார்த்ததாகவும், ஆனால் மீண்டும் கோமா நிலைக்கு சென்றதாகவும் அமிதாப் தன் பதிவில் தெரிவித்துள்ளார்.


கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி மாரடைப்பால் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவனையில் ராஜூ ஸ்ரீவஸ்தவா அனுமதிக்கப்பட்டார். அதே நாளில் அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டது. ஆனால் சுயநினைவின்றி வெண்டிலேட்டர் உதவியுடன் இருக்கும் ராஜூ ஸ்ரீவஸ்தவா நிலை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பாததால் குடும்பத்தினர், ரசிகர்கள் உட்பட அனைவரும் சோகத்தில் ஆழ்ந்தனர். பின்னர், நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார்.



 


 


கடந்த ஆக்ஸ்ட் 10 ஆம் தேதி பிரபல ஜிம் ஒன்றில் , ட்ரெட்மில்லில் ஓடியவாரு  உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த ராஜூ ஸ்ரீவஸ்தவா திடீரென நெஞ்சுவலியால் கீழே விழுந்திருக்கிறார். இதனையடுத்து ஜிம்மின் மேலாளர் அவரை அருகில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்.


அதன் பிறகு ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டது . ஆனாலும் ராஜூவின் உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. அவர் தொடர்ந்து  வெண்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வந்தார். இந்த நிலையில் 35 நாட்களுக்கும் மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் மூளைச்சாவு அடைந்ததாக செய்திகள் வெளியானது.


ஆனால் அதனை யாரும் நம்ப வேண்டாம் என உறவினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில்தான் ராஜூ ஸ்ரீவஸ்தா உயிரிழந்துவிட்டதாக , ஏ.என்.ஐ நிறுவனம் தெரிவித்தது. இது அவரது ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியையும் , மீளா சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. சமூக வலைதளங்கள் வாயிலாக அவருக்கு அஞ்சலி செலுத்து வருகின்றனர்.



 


இந்தியில் 1988 ஆம் ஆண்டு வெளியான ’தேசாப்’ என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான நடிகர் ராஜூ ஸ்ரீவஸ்தவா 2005ஆம் ஆண்டு ஒளிபரப்பான ரியாலிட்டி ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை நிகழ்ச்சியான ’த கிரேட் இந்தியன் லாஃப்டர்’ சேலஞ்சின் முதல் சீசனில் பங்கேற்ற பின் பிரபலமானார்.


உத்தரப் பிரதேச திரைப்பட மேம்பாட்டு கவுன்சிலின் தலைவராக இருந்த அவர், மெய்னே ப்யார் கியா, பாசிகர், பாம்பே டு கோவாவின் ரீமேக் மற்றும் அம்தானி அட்டானி கர்ச்சா ருபாய்யா போன்ற பல இந்தி படங்களில் நடித்துள்ளார்.