பாலிவுட்டில் பிக் பி என்று அழைக்கப்படும் அமிதாப் பச்சன் வயதானாலும், தொடர்ந்து திரைப்படங்களில் மாறுபட்ட கதாப்பாத்திரபங்களில் நடித்து அசத்தி வருகிறார். இந்தியாவில் அதிக புகழ்பெற்ற பிரபலமான அமிதாப் பச்சன் குடும்பத்தோடு மும்பையில் வசித்து வருகிறார். அதிகம் புகழும் பணமும் இருப்பவர்களுக்கு இந்தியாவில் பாதுகாப்பு அவசியமான ஒன்றாக இருக்கிறது. அதன்படி அமிதாப் பச்சனுக்கு X பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. அமிதாப் பச்சனின் பாதுகாப்புக்காக 2 காவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.




இருவரில் ஜிதேந்திர ஷிண்டே என்ற காவலர் அமிதாப் பச்சனுக்கு பிடித்தமானவர் என்று கூறப்படுகிறது. அவர்க 6 ஆண்டுகள் தொடர்ந்து அமிதாப் பச்சனுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். ஒரு பிரபலத்துக்கு பாடிகார்டாக ஒரு காவலரை தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு மேல் நியமிக்கக்கூடாது என்ற விதி உள்ளது. ஆனால், அந்த விதியை மீறி ஜிதேந்திர ஷிண்டேவை 6 ஆண்டுகள் அமிதாப் பச்சனின் பாடிகார்டாக தொடர்ந்து நியமித்து உள்ளது சட்ட விரோதமான செயல் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், அமிதாப் பச்சனின் காவலர் ஜிதேந்திர ஷிண்டே பல வழிகளில் ஆண்டுக்கு ஒன்றரை கோடி சம்பாதிப்பாக வெளியாகி உள்ள தகவல் பாலிவுட் வட்டாரத்திலும் மும்பை காவல்துறை வட்டாரத்திலும் பூதாகரத்தை கிளப்பி உள்ளது.



இது தொடர்பாக மும்பை காவல்துறை தீவிர விசாரணையில் இறங்கி இருக்கிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்து உள்ள ஜிதேந்திர ஷிண்டே, அமிதாப் பச்சன் தனக்கு ₹1.5 கோடி தரவில்லை என மறுத்து உள்ளார். தான் ஒரு தனியார் பாதுகாப்பு நிறுவனம் நடத்தி வருவதாகவும், அதன் மூலம் பிரபலங்கள் பலருக்கு  பாடிகார்டுகளை அனுப்பி பாதுகாப்பு அளித்து வருவதாகவும் ஜிதேந்திர ஷிண்டே தெரிவித்து உள்ளார். தன்னுடைய மனைவி அந்த தனியார் பாதுகாப்பு நிறுவனத்தை கவனித்து வருவதாக கூறியுள்ள ஜிதேந்திர ஷிண்டே, அதன் மூலம் ஓரு ஆண்டில் ₹1.5 கோடி வருமான ஈட்டியதாக விளக்கம் அளித்து உள்ளார். 




அதீத ரசிகர்கள் கூட்டத்தில் இருந்து நடிகர்களை பாதுகாக்கவும் வெளியில் இருந்து வரும் அச்சுறுத்தல்களில் இருந்து காக்கவும் பாதுகாப்பு அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர். சில நடிகர்களுக்கு சுயமாக பாதுகாப்பு அதிகாரிகளை நியமித்துக் கொள்கின்றனர். சில நடிகர்களுக்கு சமூகத்தில் இருக்கும் செல்வாக்கு, பாதுகாப்பு அச்சுறுத்தல் போன்றவற்றை கருத்தில் கொண்டு பல்வேறு பிரிவுகளில் பாதுகாப்பை அரசே வழங்குகிறது. அந்த வகையில், நடிகை கங்கனா ரனாவத்துக்கு Y பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியது சர்ச்சையை கிளப்பியது.