தெலுங்கில் பிரபல நடிகராக வலம் வரும் ஜூனியர் என்.டி.ஆர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துள்ளார்.
ஹைதராபாத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றிற்கு வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, கூட்டத்தை முடித்துவிட்டு, தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜூனியர் என்.டி.ஆரை சந்தித்து பேசியுள்ளார். நேற்று இரவு ஷம்ஷபாத்தில் உள்ள ஹோட்டலில் நடைபெற்ற இந்த சந்திப்பு 10 - 15 நிமிடங்கள் இருவரும் பேசினர்.
தெலுங்கு தேசம் கட்சியை நிறுவியவரும், முன்னாள் முதல்வரும், பிரபல நடிகருமான என்.டி.ஆரின் பேரனான ஜூனியர் என்.டி.ஆர் கடந்த 2009 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அந்தக்கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டார்.அதன் பின்னர் பெரிதளவில் அரசியலில் ஈடுபடாத ஜூனியர் என்.டி.ஆர் திரைத்துறையில் கவனம் செலுத்தினார். இவரது மாமாவும், ஆந்திரமுன்னாள் முதல்வரான சந்திரபாபுவுடனான உறவில் சலசலப்பு நிலவுவதாக சொல்லப்படுகிறது.
ஜூனியர் என்.டி.ஆரின் நடிப்பில் வெளியான ஆர்.ஆர்.ஆர் படத்தை பார்த்த அமித்ஷா அவரை வெகுவாக பாராட்டி இருந்தார். இந்த நிலையில் இந்த சந்திப்பு குறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமித்ஷா, “ ஹைதராபாத்தில் திறமையான நடிகரும், தெலுங்கு சினிமாவின் ஜென்டில்மேனுமான ஜூனியர் என்.டி.ஆருடனான சந்திப்பு நல்லபடியாக அமைந்தது என்று பதிவிட்டு இருக்கிறார்.
இந்த சந்திப்பில் ஆர்.ஆர்.ஆர் படத்தை பற்றியும், அதன் வெற்றிக்குறித்தும் பேசப்பட்டதாக தெரிகிறது. இருப்பினும் படத்தின் இயக்குநர் ராஜமெளலியையோ, அவரது தந்தையும், கதையாசிரியருமான விஜேந்திரபிரசாத்தையோ ( நியமன எம்.பிக்கு பரிந்துரைக்கப்பட்டவர்) சந்திக்காதது, இந்த சந்திப்பின் மீது அரசியல் ஊகங்களை எழுப்பி இருக்கிறது. மேலும் தெலுங்கில் அதிகமான ரசிர்களை கொண்ட ஜூனியர் என்.டி.ஆரின் நட்சத்திர வெளிச்சத்தை பயன்படுத்தி, குறிப்பிட்ட வகையிலான ஓட்டு வங்கியை பெற பாஜக திட்டம் வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆர்.ஆர்.ஆர் படமானது ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.