அமரன் வெற்றிவிழாவில் சிவகார்த்திகேயன்


ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் சாய் பல்லவி நடித்துள்ள படம் அமரன். கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாகிய இப்படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்றாக இடம்பிடித்துள்ளது. இதுவரை சிறிய பட்ஜெட் படங்களில் நடித்து வந்த சிவகார்த்திகேயன் முதல் முறையாக 120 கோடி பட்ஜெட் படத்தில் நடித்துள்ளார். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. சிவகார்த்திகேயன் நடித்த சமீபத்திய படங்கள் பெரியளவில் வெற்றிபெற்றுள்ளன. இதனால் அமரன் படத்தின் மீது வசூல் ரீதியாக பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அமரன் படம் 100 கோடி வசூல் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. அமரன் படத்தின் வெற்றிவிழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பாக்ஸ் ஆபிஸ் பற்றிய தனது பார்வையை பகிர்ந்துகொண்டார்.


வசூல் ஏன் முக்கியம் ?


"எல்லாரும் இந்த படம் இவ்வளவு வசூல் செய்திருக்கிறது என்று சொல்கிறார்கள். ஒரு படத்தின் வசூல் எனக்கு முக்கியம்தான். ஏனென்றால் அந்த படத்தில் தயாரிப்பாளர் பணம் போட்டிருக்கிறார். அந்த பணம் அவருக்கு திரும்பி கிடைத்தால் தான் இந்த மாதிரி இன்னும் பெரிய படங்கள் வெளியாவதற்கு வாய்ப்பு உருவாகும். நான் வசூல் முக்கியம் என்று நினைப்பதற்கு ஒரு காரணம் இதுதான். என்னைப் பொறுத்தவரை மக்களுக்கு இன்னும் பெரிய பட கொடுக்கவேண்டும். நிறைய நாடுகள் நிறைய மக்களுக்கு நம் தமிழ் சினிமாவை கொண்டு சேர்க்க வேண்டும் என்பது தான் என் ஆசை. அதற்காக மட்டும்தான் இந்த வசூல் முக்கியம்னு நான் பார்க்கிறேன். இந்த படத்தை தாண்டிட்டேன் அந்த படத்தை தாண்டிட்டேன் என்று சொல்வதற்காக நான் வசூலை பார்க்கவில்லை. மக்களுக்கு நான் பெரிய படம் கொடுக்க வேண்டும் . அதற்கு எனக்கு நிறைய பட்ஜெட் வேண்டும். நான் இந்த இடத்தில் இருப்பதற்கு  இதுவரை நான் நடித்த அத்தனை கமர்ஷியல் பட டைரக்டர்களுக்கும் நன்றி சொல்ல வேண்டும். கமர்ஷியல் வெற்றி ரொம்ப முக்கியம். இந்த மாதிரி இன்னும் நிறைய படம் வரும். நான் நிச்சயமாக அந்த மாதிரியான படங்களை முயற்சி செய்வேன். அமரன் விட இன்னும் பெரிய படம். இதே அளவுக்கு ஒரு சூப்பர் படமா என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும். ஆனால் பெரிய படங்களை நான் கொடுப்பேன். தமிழ் மக்களுக்கு என்றும் நான் உண்மையாக இருப்பேன்' என்று சிவகார்த்திகேயன் பேசியுள்ளார்.