கர்ப்பமாக இருந்தால் உடலில் மாற்றம் ஏற்படுவது இயல்பே. ஆனால், அது ஒரு நடிகையாக இருந்தால் பல்வேறு விமர்சனங்கள் பொதுவெளியில் வரத்தான் செய்யும். ஆனால் அத்தனையையும் தனது கெத்தால் துவம்சம் செய்துள்ளார் ஆல்யா மானசா.


ஆல்யாவை அறியாதவர் உண்டோ?


மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள பல சீரியல்களில் ஒன்று ராஜா ராணி 2. பல திருப்பங்களுடன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கென தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு.  2019ம் ஆண்டு  முடிவடைந்த ராஜா ராணி சீரியலின் இரண்டாம் பாகமாக இது ஒளிபரப்பாகி வருகிறது. கூட்டுக் குடும்பம் கதையை மையமாக வைத்தே இந்த சீரியல் நகர்ந்து வருகிறது. இதிலும் நாயகியாக ஆல்யா மானசா நடித்து வருகிறார். 
ராஜா ராணி சீரியல் மூலமாக பாப்புலர் ஆன ஆல்யா மானசா, முதல் பாகத்தில் தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ரகசியமாக அவர்கள் திருமணம் செய்து கொண்டாலும் சில மாதங்களுக்குப் பிறகு வெளிப்படையாக அறிவித்தனர். அவர்களுக்கு தற்போது ஐலா என்கிற இரண்டு வயது மகளும் இருக்கிறார்.
இந்நிலையில் அவர் தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார். ஆல்யா, தான் மீண்டும் இரண்டாவதாக கருவுற்று இருப்பதை அண்மையில் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்தார்.  கர்ப்பக்காலம் 8 மாதங்களைக் கடந்துவிட்ட நிலையில், இன்னும் அவர் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார்.


முதல் குழந்தை பிறப்பிற்கு பின் சிறிய இடைவெளி மட்டுமே எடுத்துக் கொண்டார் ஆல்யா. தற்போது விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிவரும் ராஜா ராணி 2 சீரியலில் சந்தியாவுக்கு நாயகனாக திருமணம் சீரியல் புகழ் சித்து நடித்து வருகிறார். சந்தியாவுக்குள்ள வரவேற்பின் காரணமாகவே, சந்தியாவாக நடிக்கும் ஆல்யாவுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.13 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. 




கர்ப்பமா இருந்தா இப்படித்தான்.. குழந்தையைப் பார்க்க ரொம்பவே ஆர்வமாக இருப்பதாக அண்மையில் ஆல்யா மானஸா கூறினார். ஆண் குழந்தை பிறந்தால், அர்ஷ் என்றும் பெண் குழந்தை பிறந்தால் லைலா என்றும் பெயர் வைக்கப்போவதாக பெயரெல்லாம் கூட அவர் தயார் செய்துவிட்டார். 


"கர்ப்பக்காலத்தில் பெண்ணில் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். அதை நான் ரசிக்கிறேன். என் கர்ப்ப காலத்தை அணு அணுவாக ரசிக்கிறேன். என் உடல் எடை கூடுகிறது, முகம் மாறுகிறது என்றெல்லாம் எனக்குக் கவலையில்லை. என் குழந்தை எட்டி உதைப்பதை ரசிக்கிறேன். குழந்தையைக் கையில் ஏந்தக் காத்திருக்கிறேன். நடிகை என்பதால் கர்ப்பத்தை மறைக்க வேண்டிய அவசியமில்லை. கர்ப்பத்தால் ஏற்படும் உடல்வாகு மாற்றத்தைக் கண்டு வருத்தப்பட வேண்டியதுமில்லை. தாய்மையை அனுபவிக்க வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார்.