பிரபல மலையாள இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் இனிமேல் தியேட்டர்களுக்கான படங்களை எடுக்க மாட்டேன் என தெரிவித்ததாக ஸ்க்ரீன்ஷாட் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
மலையாள திரையுலகில் இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், படத்தொகுப்பாளர் என பன்முக திறமை கொண்டவர்களில் ஒருவர் அல்போன்ஸ் புத்திரன்,. பல குறும்படங்களை இயக்கியுள்ள இவர் 2013 ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமானார். நிவின் பாலி, நஸ்ரியாவை முதன்மை கதாபாத்திரங்களாக கொண்டு ‘நேரம்’ என்ற படத்தை அல்போன்ஸ் புத்திரன் இயக்கியிருந்தார். இந்த படம் தமிழ், மலையாளம் என இருமொழிகளில் எடுக்கப்பட்ட நிலையில் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இதனிடையே அல்போன்ஸ் புத்திரனின் 2வது படமாக நிவின் பாலி ஹீரோவாக நடித்து மலையாளம் மட்டுமல்லாது இந்திய சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட “பிரேமம்” படம் 2015 ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன் என 3 ஹீரோயின்கள் நடித்திருந்தனர். தமிழ் சினிமாவில் வெளியான சேரனின் “ஆட்டோகிராஃப்” படத்தின் அடிப்படை கதையில் உருவான இப்படம் இன்றும் பலராலும் மறக்க முடியாத ஒன்றாக உள்ளது.
ஆனால் அதன்பின்னர் அல்போன்ஸ் புத்திரன் 7 ஆண்டுகளாக படம் எதுவும் இயக்காமல் இருந்து வந்த நிலையில் கடந்தாண்டு டிசம்பரில் பிரித்விராஜ், நயன்தாரா நடிப்பில் அவர் இயக்கிய கோல்டு என்ற மலையாள படத்தை இயக்கியிருந்தார். இப்படம் பெரிய அளவில் ரசிகர்களை கவரவில்லை. ஆனால் அடுத்ததாக “கிஃப்ட்” என்ற படத்தை அல்போன்ஸ் இயக்கி வருகிறார். இளையராஜா இசையமைக்கும் இப்படத்தில் சாண்டி மாஸ்டர், கோவை சரளா, சஹானா சர்வேஸ் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத அளவில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு விட்டு அல்போன்ஸ் புத்திரன் நீக்கியுள்ளார். அதில், “நேற்று தான் தனக்கு ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு கண்டறியப்பட்டுள்ளதால் இனி திரைப்படங்களை இயக்குவதை நிறுத்தவுள்ளேன். யாருக்கும் நான் பாரமாக இருக்க விரும்பவில்லை. பாடல் வீடியோக்கள், குறும்படங்கள், அதிகபட்சம் ஓடிடி-யில் ஏதாவது செய்ய முயற்சி செய்யவுள்ளேன். நான் சினிமாவை விட்டு வெளியேறாமல் அதில் ஏதாவது செய்யலாம் என நினைக்கிறேன். என்னால் நிறைவேற்ற முடியாத காரியங்களுக்கு நான் உறுதியளிக்க விரும்பவில்லை. உடல்நிலை பாதிப்பு அல்லது கணிக்கமுடியாத வாழ்க்கையாக இருப்பது தான் சிறந்த இடைவேளையாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.
அல்போன்ஸ் புத்திரனுக்கு ஏற்பட்டுள்ள ஆட்டிசம் ஸ்பெக்டரம் குறைபாடு என்பது நரம்பியல் தொடர்பான வளர்ச்சிக் குறைபாடு ஆகும். இதனால் பாதிக்கப்படுபவர்கள் சமூகத்தில் மற்றவர்களுடன் பழகும் திறன், தொடர்புகொள்ளும் திறன் ஆகியவற்றில் மற்றவர்களை விட பின்தங்கியிருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.