நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘லியோ’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. படம் வெளியானதில் இருந்தே பாக்ஸ் ஆபிஸ் வசூலில் பல்வேறு சாதனை படைத்து வருகிறது. 


'லியோ' சக்சஸ் மீட்:


நடிகர் விஜயின் லியோ திரைப்படம் இந்தியாவில் ரூ. 300  கோடியை தாண்டியும், உலகம் முழுவதும் ரூ. 500 கோடி வசூலை குவித்து வருகிறது. இப்படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடமும் கலவையான விமர்சனங்களை பெற்றது. 


சமீபத்தில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், 'லியோ' படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் சார்பில் வெற்றி விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதற்காக தமிழக காவல்துறையிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அதன்பிறகு  நிகழ்ச்சியை நடத்த அனுமதி கோரி செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தமிழக காவல்துறைக்கு கடிதம் எழுதியுள்ளது.


தயாரிப்பு நிறுவனத்திற்கு பதிலளித்த போலீசார், பார்வையாளர்களின் வருகை, டிக்கெட்டுகளின் எண்ணிக்கை மற்றும் ஸ்டேடியத்தில் எத்தனை பேர் இருக்க முடியும் என்பது குறித்து சில கேள்விகளைக் கேட்டனர். இந்த நிகழ்வில் தளபதி விஜய் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுவதால், இந்த நிகழ்ச்சிக்கு பெரும் கூட்டம் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்தநிலையில், சென்னை நேரு விளையாட்டு அரங்கில் வருகின்ற நவம்பர் 1ம் தேதி லியோ படத்தின் வெற்றி விழாவை நடத்த காவல்துறை இன்று அனுமதி அளித்துள்ளது. 


ஆனால் சில நிபந்தனைகள் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு..



  • விளையாட்டு அரங்கில் எவ்வளவு இருக்கைகள் உள்ளதோ அதுவரைதான் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவர்.

  • போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என்பதால் பேருந்துக்கு அனுமதி இல்லை.

  • லியோ திரைப்பட வெற்றி விழா நிகழ்ச்சிக்கு 200 முதல் 300 கார்கள் வரை மட்டுமே வரலாம்.


  • நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் மொத்தம் 8,000 இருக்கைகள் உள்ளன. 6,000 இருக்கைகள் ஒதுக்கப்படும்.