நடிகர் அல்லு அர்ஜூன் காரில் சென்று கொண்டிருக்கும்போது தனது மகளை கொஞ்சி விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
எதிர்பார்ப்பில் புஷ்பா -2
தெலுங்கு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அல்லு அர்ஜூன் இன்று முன்னணி நடிகராக உள்ளார். கடைசியாக அவர் நடிப்பில் புஷ்பா படத்தின் முதல் பாகம் வெளியாகியிருந்தது. சுகுமார் இயக்கிய இப்படத்தில் ஹீரோயினாக நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாகவும், முதல் பாகத்தில் வில்லனாக பஹத் ஃபாசிலும் நடித்திருந்தனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்த இப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகியிருந்தது வசூலிலும் நல்ல வரவேற்பை பெற்ற புஷ்பா படம் கிட்டதட்ட ரூ.400 கோடி வசூலித்ததாக சொல்லப்படுகிறது.
இதற்கிடையில் அல்லு அர்ஜூன் புஷ்பா படத்தின் 2 ஆம் பாகமான புஷ்பா - தி ரூல் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனிடையே கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி அல்லு அர்ஜூன் தனது 41வது பிறந்தநாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு புஷ்பா படத்தின் 2 ஆம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
காளி உருவத்தில் மிகவும் கம்பீரமான லுக்கில், ஜிமிக்கி, மூக்குத்தி, வளையல்கள், வங்கி, ஒட்டியாணம் உள்ளிட்ட நகைகள் அணிந்து எலுமிச்சை மாலையுடன் புடவையில் கர்வமாக நிற்கும் போஸ்டரை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போயினர். படத்துக்கும் இந்த போஸ்டருக்கு என்ன சம்பந்தம் என்னும் அளவுக்கு புஷ்பா படத்தின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
மகளின் சினிமா அறிமுகம்
கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி நடிகை சமந்தா நடிப்பில் வெளியான படம் சாகுந்தலம். இந்த படத்தில் அல்லு அர்ஜூனின் மகள் அல்லு அர்ஹா சிறப்புத் தோற்றத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். அல்லு அர்ஜூன் - ஸ்நேஹா ரெட்டியின் இரண்டாவது குழந்தையான அல்லு அர்ஹா அல்லு அர்ஜூனின் நெருங்கியத் தோழியான சமந்தாவுடன் அறிமுகமாகியுள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதற்காக அப்படத்தின் இயக்குநர் குணசேகரனுக்கு நன்றி தெரிவித்து நடிகர் அல்லு அர்ஜூன் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
மகளுடன் கொஞ்சல் விளையாட்டு
இதற்கிடையில் அல்லு அர்ஜூன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகள் அல்லு அர்ஹாவை கொஞ்சி விளையாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். பொதுவாக அவர் தனது குழந்தைகளான அயன் மற்றும் அர்ஹாவுடன் அதிக நேரத்தை செலவிட விரும்புவதை அடிக்கடி காணலாம். அப்பா-மகள் இருவரும் ஒருவரையொருவர் கொஞ்சுவதோடு பின்னணியில் இளையராஜாவின் தும்பி வா என்ற மலையாளப் பாடலின் பின்னணி இசை ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும் அப்பா - மகள் பாசத்தைப் பற்றி சிலாகித்து வருகின்றனர்.