தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, அகரம் அறக்கட்டளை மூலம் பல நற்செயல்களை செய்து வருகிறார். 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக தகவல் வெளியான நிலையில், இதுதொடர்பாக சூர்யாவின் நற்பணி இயக்கம் விளக்கம் அளித்திருக்கிறது. கடந்த சில நாட்களாக நடிகர் சூர்யா கொங்கு மண்டலத்தில் திமுக சார்பில் போட்டியிட இருப்பதாகவும் தகவல் வெளியானது. இதுகுறித்த செய்திகளும் பேசுபொருளானது. 

Continues below advertisement

விஜய்க்கு எதிராக சூர்யாவா?

சமீபத்தில் நடந்த அகரம் அறக்கட்டளையின் 15ஆம் ஆண்டு விழாவில் திமுக பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டு சூர்யாவிற்கு வாழ்த்து தெரிவித்தனர். மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் சூர்யா தமிழ்நாட்டின் எதிர்காலமாய் இருப்பதாகவும் மேடையில் பேசினார்கள். சூர்யா செய்து வரும் செயலை சுட்டிக்காட்டி தவெக தலைவர் விஜய்யை பலரும் சமூகவலைதளங்களில் வறுத்தெடுத்தனர். விஜய்யை விட சூர்யா தான் சிறப்பாக செயல்படுகிறார். கல்வி என்றால் இதுதான் என்பதை விஜய் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் விமர்சிக்க தொடங்கினர். விஜய்யை எதிர்கொள்ளும் வகையில் நடிகர் சூர்யாவை திமுக பயன்படுத்த உள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சூர்யா நற்பணி இயக்கம் அறிக்கை

இதைத்தொடர்ந்து, நடிகர் சூர்யா திமுக சார்பில் கொங்கு மண்டலத்தில் களமிறக்கப்படுவார் என்று செய்திகள் வெளியானது. இதுகுறித்த விவாதங்களும் பெரிய அளவில் எழுந்தன. இந்நிலையில், இதுதொடர்பாக சூர்யா நற்பணி இயக்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.  அந்த அறிக்கையில், ஊடக நண்பர்களுக்கும், சமூகவலைதள நண்பர்கள், சகோதர, சகோதரிகளுக்கும் அகில இந்திய சூர்யா நற்பணி இயக்கம் சார்பில் வணக்கங்களை தெரிவித்துக்காள்கிறோம். 

Continues below advertisement

தேர்தலில் போட்டியில்லை

கடந்த சில நாட்களாக அண்ணன் சூர்யா வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போகிறார் என்று சமூக வலைதளங்களை மையமாக வைத்து பொய்யான செய்தி பரப்பப்பட்டு வருகிறது. இது உண்மைக்கு மாறான தகவல். அதுமட்டுமின்றி சூர்யாவின் கோட்பாடுகளுக்கு முரணானது. கலை உலகப் பயணமும், அகரமும் ஆகிய இரண்டும் அவரது வாழ்விற்கு போதுமான நிறைவை தந்திருக்கிறது. சமீபத்தில் நடந்த அகரம் நிகழ்வு சர்வதேச அளவில் கவனம் ஈர்க்கப்பட்டது. இதற்கு காரணமானவர்களுக்கு எங்கள் மகிழ்ச்சி கலந்த நன்றிகள். சூர்யாவை நேசிக்கும் கோடிக்கணக்கான நபர்களின் வாழ்த்துகளுடன் சினிமாவில் மட்டும் கவனம் செலுத்துவார். தேர்தல் குறித்து வெளியாகும் செய்திகளை திட்டவட்டமாக மறுக்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.