இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன் இடையிலான போர் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக நடைபெற்று வருகின்றது. இந்த போர் குறித்த திடுக்கிடும் தகவல்களும் மனதை உலுக்கும் காட்சிகளும் தொடர்ந்து வெளியாகி வந்தன. இந்த போர்க்கு சில நாடுகள் நேரடியாகவும் சில நாடுகள் மறைமுகமாகவும் தங்களது ஆதரவுகளை இரு தரப்பினருக்கும் அளித்து வருகின்றனர்.
வான்வழித் தாக்குதல்:
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதாவது மே மாதம் 26ஆம் தேதி ரஃபாவில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஏராளமான பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டனர். இதனால் இஸ்ரேலுக்கு சர்வதேச அளவில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றது. ஆனாலும் போரை தொடரப் போவதாக இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.
ரஃபாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் 45 பாலஸ்தீனிய கொல்லப்பட்டதாகவும் நூற்றுக்கு மேற்பட்டோர் தீக்காயங்களுடனும் தாக்குதலின் போது தூக்கி வீசப்பட்டதில் எலும்பு முறிவு, துப்பாக்கி குண்டு காயங்கள் ஏற்பட்டவர்களும் சிகிச்சை பெற்று வருவதாக ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காஸா சுகாதார அமைச்சகம் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளது.
திரைப் பிரபலங்கள் கண்டனம்:
இந்நிலையில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதை பலரும் கண்டித்து வரும் நிலையில், இந்திய திரைப் பிரபலங்கள் பலரும் தங்களது அதிருப்திகளையும் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக சமூக வலைதளங்களில், ”All Eyes On Rafah” என்ற ஹேஸ் டேக் ட்ரெண்ட் ஆகி வருகின்றது. இந்திய திரைப்பிலங்களில் யார் யார் என்னென்ன கூறியுள்ளனர் என்பதைக் காணலாம்.
சமந்தா
நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சர்வதேச நீதிமன்றம் போரை நிறுத்த உத்தரவிட்ட பின்னரும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது மிகவும் கண்டனத்திற்குரியது. இதனைக் குறிப்பிட என்னிடத்தில் வார்த்தைகள் இல்லை. இந்த பயங்கரவாதத் தாக்குதல் உடனே நிறுத்தப்படவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
எமி ஜாக்சன்
நடிகை எமி ஜாக்சன் தனது இன்ஸ்டாகிராமில் “அப்பாவி மக்கள் இனப்படுகொலையை சகித்துக்கொண்டிருக்கும்போது அதே நேரத்தில் நாம் சொகுசான வாழ்க்கையை வாழ்வது முற்றிலும் மனதிற்கு கஷ்டமாக உள்ளது. ஒரு தாயாக ரஃபாவில், பயத்தின் உச்சத்தில் உள்ள ஆறு லட்சத்துக்கும் மேற்பட்ட, அதிலும் பெரும்பாலும் அனாதையான குழந்தைகளின் வலி மற்றும் துன்பத்தினை என்னால் கற்பனைகூட செய்து பார்க்கமுடியவில்லை. நமது சமூகம் அதன் தார்மீகங்களை இழந்துவிட்டது.
திரைப்பட விழாக்களும் ஊடகங்களும் இனப்படுகொலைக்கு எதிரான கூக்குரலை மௌனமாக்குவது, அநீதியை எடுத்துக்காட்டுகிறது. நாங்கள் போர் உடனே நிறுத்தப்படவேண்டும். பாலஸ்தீன மக்கள் எதிர்கொள்ளும் சித்திரவதைகளில் இருந்து அவர்களை மீட்கும் வரை நமது அரசாங்கங்கள் வேறு பக்கம் திசைதிரும்ப வேண்டாம். அப்பாவி ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் கொலைக்கு எந்த நியாயமும் கற்பிக்க முடியாது” என பதிவிட்டுள்ளார்.
இதேபோல் துல்கர் சல்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த தாக்குதலுக்கு எதிராக பதிவிட்டுள்ளார்.