தன் கொஞ்சும் குரலால் பாலிவுட் சினிமாவில் தொடங்கி, இந்தி சினிமா தாண்டி உலகம் முழுவதும் ரசிகர்களைப் பெற்றவர் அல்கா யாக்னிக்.
40 ஆண்டுகள், 8000 பாடல்கள்
சுமார் 40 ஆண்டுகளாக பாலிவுட் சினிமாவில் பாடி வரும் அல்கா யாக்னிக் தன் வாழ்நாளில் ஏறக்குறைய 8000 பாடல்கள் வரை பாடியுள்ளார். குறிப்பாக 90களில் மிகப் பிரபலமடைந்த அல்கா யாக்னிக் பல நடிகைகளுக்கும் பின்னணிக் குரல் கொடுத்தும் வந்துள்ளார்.
இந்நிலையில், யூடியூப் தளத்தில் அதிகம் கேட்டு ரசிக்கப்பட்ட கலைஞர் என்ற சாதனையைப் புரிந்து அல்கா யாக்னிக் கவனமீர்த்துள்ளார். இன்றைய இணைய உலகில் அதிக ரசிகர்களைப் பெற்று கோலோச்சி வரும் கொரிய இசைக்குழுவான பிடிஎஸ், பிரபல அமெரிக்க பாப் பாடகர் டெய்லர் ஸ்விஃப்ட் உள்ளிட்ட பல சர்வதேச இசைக் கலைஞர்கள், பாடகர்கள் பலரை பின்னுக்குத் தள்ளி, யூடியூப்பில் அதிகம் ஸ்ட்ரீம் செய்யப்பட்ட கலைஞர் எனும் பெருமையை அல்கா யாக்னிக் பெற்றுள்ளார்.
சர்வதேச கலைஞர்களை பின்னுக்குத் தள்ளிய பாடகி
கின்னஸ் புத்தகத்தின் படி 2022ஆம் ஆண்டில் உலக அளவில் யூடியூப்பில் அதிகம் ஸ்ட்ரீம் செய்யப்பட்ட கலைஞராக அல்கா உருவெடுத்துள்ளார். சராசரியாக ஒரு நாளைக்கு 42 மில்லியன் ஸ்ட்ரீம்கள் வீதம் அல்காவின் பாடல்கள் 15.3 பில்லியன் ஸ்ட்ரீம்களைப் பெற்றுள்ளன.
கடந்த 2021 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் அல்கா யாக்னிக்கின் பாடல்கள் முறையே 17.7 பில்லியன் மற்றும் 16.6 பில்லியன் ஸ்ட்ரீம்களையே பெற்றிருந்தன.
அவரைத் தொடர்ந்து 14.7 பில்லியன் ஸ்ட்ரீம்களுடன் இசைக் கலைஞர் Bad Bunny உள்ளார். BTS மற்றும் BLACKPINK ஆகிய கொரிய இசைக்குழுக்கள் முறையே 7.95 பில்லியன் மற்றும் 7.03 பில்லியன் ஸ்ட்ரீம்களைக் கொண்டுள்ளன. டெய்லர் ஸ்விஃப்ட் 4.44 பில்லியன் ஸ்ட்ரீம்களுடன் 2ஆவது இடத்திலும், டிரேக் 2.9 பில்லியனுடன் 5ஆவது இடத்திலும் உள்ளனர்.
ரஹ்மான் இசையில் பாடல்கள்
கொல்கத்தாவில் பிறந்த அல்கா யாக்னிக் தன் சிறு வயது முதலே தன் தாயிடம் இந்துஸ்தானி இசை கற்று தேர்ந்த பாடகியாக உருவெடுத்தார். சிறந்த பின்னணி பாடகிக்க் இரண்டு தேசிய விருதுகள் உள்பட ஏராளமான விருதுகளைக் குவித்துள்ள அல்கா யாக்னிக், தமிழ் சினிமாவில் ஓரம்போ ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைப்பில் இது என்ன மாயம் உள்ளிட்ட சில பாடல்களையும் பாடியுள்ளார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் தாள், தமாஷா உள்ளிட்ட படங்களில் பாடி நாடு கடந்தும் ரசிகர்களை தன் குரலால் கட்டிப்போட்டார்