கரூர் மாநகராட்சி திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் கோ-கோ, கைப்பந்து, கபாடி உள்ளிட்ட குழுப் போட்டிகளை அமைச்சர் செந்தில்பாலாஜி, பந்தை சர்வீஸ் செய்து துவக்கி வைத்தார். பிப்ரவரி 4-ம் தேதி அன்று மாணவிகளுக்கான தடகள போட்டிகளும், ஐந்தாம் தேதி மாணவர்களுக்கான தடகள போட்டிகளும் நடைபெற உள்ளது. குழு போட்டியில் சிறந்த ஐந்து விளையாட்டு வீரர்கள் மற்றும் ஐந்து வீராங்கனைகளுக்கும், அதிக புள்ளிகள் பெற்ற இரண்டு பள்ளி மற்றும் இரண்டு கல்லூரிக்கும் என மொத்தம் 14 கோப்பைகள் சிறப்பு பரிசாக வழங்கப்பட இருக்கின்றன.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு குழுப் போட்டிகள், தனிநபர் போட்டிகள் இந்த வாரமும், அடுத்த வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெற உள்ளது. முதல்வர் பிறந்த நாளையொட்டி வரும் மார்ச் 5ம் தேதி கரூரில் பிரம்மாண்டமாக ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாடு பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன" என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
விளையாட்டுப்போட்டி துவங்கி வைக்க வருகை புரிந்த மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி மாணவிகள் உங்களுடன் நாங்கள் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாமா என கேட்டனர். உடனே சில நொடி கூட தாமதிக்காமல் உடனே சம்மதம் தெரிவித்தார். போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவிகளும், ஆசிரியர்களும் குழு குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அதை தொடர்ந்து அனைத்து விளையாட்டு போட்டியையும் மின்சார துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
குறிப்பாக சில போட்டிகளை அவர் சிறிது நேரம் நின்று ஆர்வத்துடன் மாணவிகளின் விளையாட்டை கவனித்தார். இந்த விளையாட்டுப் போட்டி துவக்க விழா நிகழ்ச்சியில் கிருஷ்ணாபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி, குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம், அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்களும், திமுக நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ஈரோடு இடைத்தேர்தல் குறித்த கேள்விக்கு இங்கு அதைப் பற்றி பேச வேண்டாம் என்று அமைச்சர் தெரிவித்தார். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் மாணவிகளுக்கான குழு போட்டியும் மாணவர்களுக்கான குழு போட்டியும் நடைபெற்ற பின்னர் வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாவட்ட அளவிலான தடகள போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெறுகிறது.
அதைத் தொடர்ந்து வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு பிரமாண்ட விழா ஏற்பாடு செய்யப்பட்டு விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்க கரூர் மாவட்ட திமுக சார்பாக ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக இந்த பரிசளிப்பு விழாவில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்க வாய்ப்பிருப்பதாக திமுக வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.