விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள ஆவுடையார் பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 42). இவருக்கும் நெல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்த வினோத் குமார் என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன் விரோதம் இருந்துள்ளது. இது தொடர்பாக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்து, விசாரணை செய்யப்பட்டு இருவருக்கும் சமரச தீர்வு கொடுத்துள்ளனர். இந்நிலையில் மீண்டும் இது சம்பந்தமாக வினோத்குமார் ஆவுடையார்பட்டு கிராமத்தை சேர்ந்த சிலருடன் சேர்ந்து ஸ்ரீதரிடம் மீண்டும் பணம் கேட்டு மிரட்டினார்.
இந்த நிலையில் நேற்று மாலை 3 மணி அளவில் வீட்டின் மீது மர்ம நபர்கள் கற்களை எரிந்துள்ளனர். இது குறித்து விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் ஸ்ரீதர் புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. நேற்று இரவு ஸ்ரீதர் தனது குடும்பத்துடன் வீட்டில் தூங்கினார். நள்ளிரவு சமயம் மர்ம நபர்கள் அங்கு வந்துள்ளனர். அப்போது வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினர். அது பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது. இதனால் அந்த இடமே தீப்பிளம்பாக காட்சி அளித்தது. இந்த குண்டு வீச்சில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 இருசக்கர வாகனகள் தீப்பிடித்து எரிந்தது. சத்தம் கேட்டு ஸ்ரீதர் மற்றும் வீடடில் உள்ளவர்கள் வெளியே ஓடிவந்தனர். ஆட்கள் வருவதை அறிந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து விக்கிரவாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த காவல் ஆய்வளர் விநாயகமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
என்ன செய்ய வேண்டும்?
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்