தமிழர்களின் பாரம்பரியமான விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு, ஒவ்வொரு ஆண்டும் பொங்கலை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் நடைபெறும். கடந்த 2017ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற வேண்டும் என இளைஞர்கள் மெரினாவில் கூடி புரட்சி செய்தனர்.


அதன் வழி தொட்டு இந்தாண்டும் அவனியாபுரத்தில் 15 ஆம் தேதியும், பாலமேட்டில் 16 ஆம் தேதியான நேற்றும் வெகு சிறப்பாக ஜல்லிக்கட்டு நடந்து முடிந்தது. இந்தநிலையில், தற்போது உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. இதை, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காலை 7 மணிக்கு தொடங்கி வைத்தார்.


பிரபலங்கள் பங்கேற்பு: 


மதுரையை அடுத்த அலங்காநல்லூரில் இன்று நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை காண பல்வேறு திரை பிரபலங்கள் படையெடுத்து வருகின்றன. அமைச்சர் உதயநிதியை தொடர்ந்து சமீபத்தில் வெளியான ’மிஷன்’ படத்தின் நடிகர் அருண் விஜய் வந்தார். படப்பிடிப்பின்போது ஏற்பட்ட காயம் காரணமாக அவரது வலது கை மற்றும் வலது காலில் கட்டு போடப்பட்டு இருந்தது.


அதையும் பொருட்படுத்தாது நடிகர் அருண் விஜய் அலங்காநல்லூரில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளித்தார். தொடர்ந்து, மிஷன் படத்தின் இயக்குநர் ஏ.எல்.விஜயும் வருகை பிரிந்து கண்டுகளித்தார். 


மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்த நடிகர் அருண் விஜய் அளித்த பேட்டியில், ”தமிழர்களின் வீர விளையாட்டான அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல் முறையாக வந்து பார்க்கிறேன். மாடுபிடி வீரரை போல ஒரு கதைக்களம் அமைய வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. தமிழரின் பாரம்பரியம் கொண்டாடப்பட வேண்டும். மிஷன் படத்தின் ப்ரமோசனுக்காக மதுரை வந்த இடத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை காண்பதில் மகிழ்ச்சி” என தெரிவித்தார்.


நடிகர் சூரி, நீயா நானா கோபி பங்கேற்பு: 


பாலமேட்டில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்ற நடிகர் சூரி, இன்று நடைபெற்று வரும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டையும் பார்வையிட்டு வருகிறார். மேலும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா, நானா நிகழ்ச்சியின் பிரபல தொகுப்பாளர் கோபியும் தனது மகளுடன் பார்வையிட்டு வருகிறார். மேலும், இந்த விழாவில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், கால்நடை பராமரிப்புத் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் மங்கத் ராம் சர்மா,இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, இ.ஆ.ப., , சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தளபதி (மதுரை வடக்கு) ,ஆ.வெங்கடேசன்  (சோழவந்தான்), மு.பூமிநாதன்  (மதுரை தெற்கு), தமிழரசி  (மானாமதுரை)  அவர்கள் உட்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.


பரிசுகள்: 


அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வெற்றி பெறும்  மாடு பிடி வீரர்கள், காளைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உருவம் பொறித்த மோதிரம் பரிசாக வழங்கப்பட்டது வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிவரை என ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு சுற்று நடைபெறுகிறது. போட்டியில் பங்கேற்க தமிழகத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, கோவை, கரூர், சிவகங்கை, புதுக்கோட்டை, பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் காளைகள் வந்துள்ளனர். 


இந்த போட்டியில் சிறப்பாக களம் காணும் முதல் மாடிபிடி வீரருக்கும், காளைக்கும் தலா ஒரு கார் பரிசாகவும், 2ஆவது இடம் பிடிக்கும் மாடுபிடி வீரருக்கும், காளைக்கும் தலா ஒரு பைக் பரிசாகவும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  போட்டியில் முடிவில் 3ஆவது பரிசு குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று விழா கமிட்டி சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.