திரைப்படம் வெளியான 6 நாள்களில் தியேட்டர்களை விட்டு வெளியேற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது அக்‌ஷய் குமார் நடித்த பிரம்மாண்ட பட்ஜெட் திரைப்படம்.


சந்திரபிரகாஷ் திவிவேதி இயக்கத்தில் அக்‌ஷய் குமார், சஞ்சய் தத், மனுஷி சில்லார் உள்ளிட்ட பலர் நடிப்பில் சுமார் 200 கோடி பட்ஜெட்டில் உருவான படம் தான் சாம்ராட் பிரித்விராஜ். இந்த திரைப்படம் கடந்த ஜூன் 3ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று திரைக்கு வந்தது. முதல்நாளில் 10.70 கோடி வசூலையும், சனிக்கிழமை 12.60 கோடி ரூபாய் வசூலையும், ஞாயிறு 16.10 கோடி ரூபாய் வசூலையும் அள்ளியது.




ஆனால், மே இறுதி வாரத்தில் வெளியான பூல் பூலயா 2 திரைப்படம் 55 கோடி வசூலை எட்டியிருந்த நிலையில் பிரித்விராஜ் 40 கோடி ரூபாய் வசூலைக் கூட எட்டவில்லை. அதைவிட அதிர்ச்சி என்னவென்றால் படம் பார்க்க ஆட்கள் வராததால் திங்கள்கிழமை காலைக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டது தான். உலகம் முழுவதும் சுமார் 5000 திரையரங்குகளில் வெளியான இந்த படம் மோசமான விமர்சனங்களால் ரசிகர்களின் வருகை வெகுவாக குறைந்துவிட்டது.


ஞாயிறு அன்று 16 கோடி வசூலித்த அந்த படம், திங்களன்று 5 கோடி ரூபாயையும், செவ்வாயன்று 4.25 கோடி ரூபாயையும், புதனன்று 3.60 கோடி ரூபாயை மட்டுமே வசூல் செய்தது.  5000 தியேட்டர்களில் ரிலீஸான இந்த படம் 50 கோடி ரூபாய் வசூலைப் பெற முக்கிக்கொண்டிருக்கிறது. இன்றைய நிலவரப்படி ரூபாய் 52.25 கோடியை வசூலித்திருக்கிறது. இதே நிலமையில் சென்றால் இந்த வார இறுதியில் இப்படம் ரூபாய் 55.50 கோடியை வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




12ம் நூற்றாண்டில் வாழ்ந்த ப்ரிதிவிராஜ் சவுகான், முகலாய மன்னரான முகமது கோரியின் படையெடுப்பை எப்படி எதிர்த்தார் என்ற கதையினை படமாக்கியுள்ளனர். ஆனால், வரலாற்றை அப்படியே எடுக்காமல் கம்பி கட்டும் கதையாக படத்தில் நிறைய சொல்லியிருப்பதால் படம் கடும் விமர்சனத்திற்குள்ளாகியிருக்கிறது.


இத்திரைப்படத்திற்கு குஜராத், உத்தரபிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநில அரசுகள் வரிவிலக்கு அளித்திருக்கின்றன. எனினும் ரசிகர்கள் வருகை ஒற்றை இலக்கத்திலும், சில இடங்களில் ஒருவர் கூட வராததால் காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.




ஜுராசிக் வேர்ல்ட்: டொமினியன் திரைப்படம் வேறு வெளியாகியுள்ளதால் இப்படத்திற்கு வரும் பார்வையாளர்கள் எண்ணிக்கை மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்தின் மூலம் தொடர்ந்து இரண்டாவது தோல்வியை சந்திக்கிறார் அக்‌ஷய் குமார். பச்சன் பாண்டே என்ற திரைப்படம் முன்பு தோல்வியடைந்ததையடுத்து இது இரண்டாவது திரைப்படமாகும். 


எனினும் JugJugg Jeeyo திரைப்படம் ஜூன் 24ம் தேதி தான் வெளியாகும் என்பதால் அதுவரை இப்படம் தியேட்டர்களில் தவழ்ந்துகொண்டிருக்கும்.