பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடிப்பில் வெளியான பெல் பாட்டம்(Bell Bottom) திரைப்படம் உலகின் மிக உயரமான இடத்தில் உள்ள நகரும் திரையரங்கில் திரையிடப்பட உள்ளது.


ரஞ்சித் எம்.திவாரி இயக்கத்தில் அக்‌ஷய் குமார், வாணி கபூர், ஹுமா குரேஷி, லாரா தத்தா உள்ளிட்டோர் நடித்து உள்ள பெல் பாட்டம் திரைப்படம் கடந்த ஆகஸ்டு 19-ம் தேதி திரைக்கு வந்தது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கு காலத்தில் தொடங்கப்பட்டது. இதன் மூலம் கொரோனா ஊரடங்கு காலத்தில் படிப்பிடிப்பு நடத்தப்பட்டு திரையரங்குகளில் வெளியான முதல் பாலிவுடன் திரைப்படம் என்ற பெருமையை அக்‌ஷய் குமாரின் பெல் பாட்டம் திரைப்படம் பிடித்து இருக்கிறது.



1980களில் நடக்கும் கதை போல் படமாக்கப்பட்ட பெல் பாட்டம் திரைப்படத்தில் அக்‌ஷய் குமார் “ரா” உளவுத்துறை அதிகாரியாக நடித்து இருக்கிறார். அந்த சமயத்தில் நடைபெற்ற விமான கடத்தல் சம்பவங்களால் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதை கதையின் கருவாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியாக லாரா தத்தா நடித்து உள்ளார்.


இந்த நிலையில், இப்படம் உலகின் மிக உயரமான இடத்தில் அமைக்கப்பட்டு இருக்கும் நகரும் திரையரங்கில் திரையிடப்பட உள்ளது. லடாக்கில் உள்ள லெஹ்வில் 11,562 அடி உயரம் கொண்ட மலைப்பகுதியில் அமைந்திருக்கும் நகரும் திரையரங்கில் அக்‌ஷய் குமாரின் பெல் பாட்டம் திரைப்படம் திரையிடப்பட உள்ளதாக அறிவித்து உள்ளனர். லெஹ் மலைப்பகுதியில் தற்போது மைனஸ் 28 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குளிர் வாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.


இதுகுறித்து நடிகர் அக்‌ஷய் குமார் தனது ட்விட்டர் பதிவில், ”லடாக்கில் உள்ள லெஹ்வில் உலகின் மிக உயரமான இடத்தில் அமைந்திருக்கும் நகரும் திரையரங்கத்தில் பெல் பாட்டம் திரைப்படம் வெளியாவதை நினைத்து எனது இதயம் பெருமையால் வீங்குகிறது. 11,562 அடி உயரத்தில் மைனஸ் 28 டிகிரி செல்சியல் குளிரில் திரைப்படம் ஓட இருக்கிறது.” என குறிப்பிட்டு உள்ளார்.


பெல்பாட்டம் படம் திரையிடப்படும் நகரும் திரையரங்கத்தை கடந்த வாரம் தான் லெஹ்வில் பிக்சர் டைம் டிஜிபிளக்ஸ் என்ற நிறுவனம் அமைத்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த 22-ம் தேதி இந்திய ராணுவம் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்புப்பிரிவு வீரர்களுக்கு பெல் பாட்டம் படம் திரையிட்டு காட்டப்பட்டது.



இதனிடையே பஞ்சாப் மாநிலம் லூதியானாவால் உள்ள பெவிலியன் மாலில் அக்‌ஷய் குமாரின் பெல் பாட்டம் திரைப்படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ”விவசாயிகள் போராட்டத்துக்கு எதிராக அக்‌ஷய் குமார் கருத்து தெரிவித்தார். பஞ்சாபை பூர்வீகமாக கொண்டுள்ள அக்‌ஷய் குமார் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து ஒருவார்த்தைக்கூட பேசவில்லை. அவரது பெல்பாட்டம் படத்தை பஞ்சாபில் வெளியிட விட மாட்டோம்” என விவசாயிகள் தெரிவித்தனர். விவசாயிகளின் கடும் எதிர்ப்பால் பஞ்சாப் மாநிலத்தில் பெல் பாட்டம் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.