கள்ளக்குறிச்சியில் இருந்து விழுப்புரம் நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது விழுப்புரத்திலிருந்து கள்ளக்குறிச்சி அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. தியாகதுருகம் என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த பேருந்து மீது வேகமாக மோதி விபத்துக்குள்ளானது தகவலறிந்து சென்ற காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்ட இந்த விபத்தில் காரில் பயணித்த இரண்டு பெண்கள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சென்னை தாம்பரத்தை சேர்ந்த 6 பேர், ஒரு காரில் ஊட்டிக்கு சுற்றுலா சென்றனர். பின்னர் அங்கிருந்து மீண்டும் சென்னைக்கு புறப்பட்டனர். இவர்களது கார், கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் புறவழிச்சாலையில் நேற்று இரவு வந்து கொண்டிருந்தது. அதே வேளையில் சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் ஒன்று சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. பஸ்சை சேலம் மாவட்டம் கெங்க வல்லி அருகே உள்ள ஊனத்தூரை சேர்ந்த அழகுராஜன்(வயது 40) என்பவர் ஓட்டினார்.
தியாகதுருகம் புறவழிச்சாலை பிரிதிவிமங்கலம் பஸ்நிறுத்தம் அருகே சுற்றுலா சென்று திரும்பியவர்கள் வந்த காரும், எதிரே வந்த அரசு பஸ்சும் கண்ணிமைக்கும் நேரத்தில் பயங்கரமாக மோதிக்கொண்டன. இந்த கோர விபத்தில் பஸ்சின் அடியில் கார் சிக்கிக்கொண்டது. இதனால் கார் அப்பளம் போல நொறுங்கியது. காரை சில அடி தூரத்துக்கு பஸ் இழுத்து சென்று சாலையோர பள்ளத்தில் இறங்கி நின்றது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் தியாகதுருகம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பஸ்சுக்கு அடியில் சிக்கிய காரை மீட்பு வாகனம் மூலம் மீட்டனர். இந்த விபத்தில் காரில் வந்த சென்னை தாம்பரம் பகுதியை சேர்ந்த எபினேசர் இமான்(வயது 38), இவான், ரபேக்கா, இவரது தாயார், 14 வயது சிறுவன் உள்பட 6 பேர் இருக்கையில் அமர்ந்தபடியே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். இவர்களின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பஸ் டிரைவர் அழகுராஜன், கண்டக்டர் மாரிமுத்து மற்றும் பஸ்சில் வந்த 35 பயணிகள் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலத்தில் இருந்து ஆத்தூர், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர் வழியாக தாம்பரம், சென்னைக்கு செல்ல சுமார் 320 கி.மீ., தொலைவில் புறவழிச்சாலை போடப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை கட்டுப்பாட்டில் உள்ள இந்த சாலையில், சேலம் அம்மாபேட்டை, அயோத்திபட்டினம், வாழப்பாடி, ஆத்தூர், சின்னசேலம், கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், எலவனாசூர்கோட்டை, உளுந்தூர்பேட்டை ஆகிய 9 இடங்களில் நகரை ஒட்டியுள்ள பகுதி மட்டும் இருவழிச்சாலையாக உள்ளது. மற்ற இடங்களில் நான்கு வழி சாலை உள்ளது.
தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக செல்லும் வாகனங்கள் நான்கு வழிசாலை இருவழிச்சாலையாக குறுகும் இடத்திலும், இருவழிச்சாலையில் வாகனங்கள் ஒன்றையொன்று முந்தி செல்லும் போதும் பெரும் விபத்து ஏற்படுகிறது. கடந்த 2மதங்களுக்குள் 10க்கும் மேற்பட்டோர் வாகன விபத்துகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர். வாகன விபத்தை தவிர்க்க இருவழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.