ஓ.எம்.ஜி படத்தின் இரண்டாம் பாகத்தின் ட்ரெய்லர் வெளியாகி இணையதளத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.


ஒ.எம்.ஜி (OMG – OH MY GOD )


அக்‌ஷய் குமார் நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியானத் திரைப்படம் ஒ.எம்.ஜி (OMG – OH MY GOD ). ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பைப் பெற்ற  இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி  கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. அக்‌ஷய் குமார், பங்கஜ் த்ரிப்பாட்டி, யாமி உள்ளிட்ட நடிகர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள்.


ட்ரெய்லர் எப்படி?


தனது பக்தர் ஒருவருக்கு மிகப்பெரிய இடர் நேரப்போவது தெரிந்து பூமிக்கு தனது சேவகன் ஒருவனை அனுப்பி வைக்கிறார் கடவுள் சிவன். பலரின் கை காலைப் பிடித்து தனது மகனை மிகப்பெரிய பள்ளியில் சேர்த்துவிடுகிறார் பங்கஜ் த்ரிபாதி. தான், தனது சின்ன குடும்பம் என்று வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கும் இந்த சிவபக்தர் வாழ்க்கையில் எதிர்பாராத ஒரு நிகழ்வு ஏற்படுகிறது. தனது மகன் தொடர்பான ஒரு வீடியோ திடீரென்று கசிகிறது. இதனால் அவனை பள்ளியில் இருந்து நீக்க முடிவு செய்கிறது பள்ளி  நிர்வாகம்.


மனித உருவத்தில் கடவுள்


தனது மகனின் ஒட்டுமொத்த வாழ்க்கையும் சிதைந்து போகப்போவதை நினைத்து கடவுளிடம் உதவுமாறு மன்றாடுகிறார் கதாநாயகர். மனித அவதாரத்தில் தோன்றும் சிவன் (அக்‌ஷய் குமார்) தனது மகனின் சார்பாக பள்ளி நிர்வாகத்தை எதிர்த்து வழக்கு தொடுத்து வாதிட வைக்கிறார் சிவன். இன்றைய கல்வி முறையை பல்வேறு வகைகளில் கேள்விக்குட்படுத்தும் ஒரு முயற்சியாக இந்தப் படம் இருக்கும் என்று ட்ரெய்லரின் மூலம் தெரிய  வருகிறது. ஆனால் இதில் சில சர்ச்சைக்குரிய விஷயங்களை கண்டறிந்துள்ளார்கள் இணையதள வாசிகள்.



என்ன சர்ச்சை?


முதல் சர்ச்சையாக கூறப்படுவது ட்ரெய்லரில் வரும் நடிகர்களின் பெயர்கள், படக்குழுவின் பெயர்கள், என அனைத்தும் இந்தி மொழியில் இடம்பெற்றிருக்கின்றன. இவ்வளவு பிரபலமான ஒரு படத்தை  நிச்சயம் பன்மொழிகளில் வெளியிடத்  திட்டமிட்டிருக்கும் படக்குழு அப்படியான நிலையில் அனைவருக்கும் புரியும் வகையில் இல்லாமல், இந்தி மொழியில் மட்டுமே பெயர்கள் வைத்திருப்பது திட்டமிட்ட ஒரு முயற்சியே என்று விமர்சித்துள்ளார்கள் பலர்.


மேலும் இந்து மதத்தை உயர்த்திப் பேசி மற்ற மதத்தினரை மறைமுகமாக குறைத்து பேசும்படியான ஒரு வசனம் ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ளது என மற்றொரு விமர்சனமும் வைக்கப்படுள்ளது. மதத்தை மையப்படுத்தி பல்வேறு கலவரங்கள் நாட்டில் நிகழ்ந்து வரும் நிலையில் மதவாத போக்கை ஊக்குவிக்கும் வகையில் இந்தப் படத்தின் ட்ரெய்லர் அமைந்துள்ளதாக சினிமா ஆர்வலர்கள் இணையத்தில் கருத்துகளை முன்வைத்து வருகின்றனர்.