உணவகங்களில் புகைக்குழல் கூடத்திற்கு ( Smoking Room ) தடை என அரசிதழில் வெளியடப்பட்டுள்ளது.
உணவுக்கூடங்கள் உள்ளிட்ட எந்த இடத்திலும் புகைக்குழல் அறை திறக்க தடை விதித்து தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றிய நிலையில் அது தற்போது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
சாராயம், மதுபானம் ஆகிய கடைகளை தவிர்த்து புகைக்குழல் கூடம் எங்கும் திறக்கப்பட கூடாது எனவும் அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசின் விதிமுறைகளை மீறியிருந்தால் புகைக்குழல் கூடத்தில் உள்ள பொருட்களை பறிமுதல் செய்ய சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் விதிகளை மீறி புகைக்குழல் கூடம் நடத்தினால் ஓராண்டு முதல் 3 ஆண்டுகளுக்கு சிறை தண்டனை உடன் இருபதாயிரம் முதல் ஐம்பதாயிரம் வரை அபராதமும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகையிலையை புகைப்பவருக்கு மட்டுமில்லாமல் அந்த பாதிப்பு அருகில் உள்ளவர்களுக்கும் மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எந்தவொரு வடிவத்திலும் புகையிலையின் நுகர்வு எல்லோருக்கும் தீங்கிழைக்கக்கூடியதுதான். ஆனாலும் உலகெங்கும் பலர் இதற்கு அடிமையாகி உயிரிழக்கின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து பிரபல தொற்றுநோய் நிபணர் புரோஹித் கூறுகையில், "அதிகமாக புகையிலை பயன்படுத்துபவர்களில் உலக அளவில் இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. இங்கு 26 கோடியே 80 லட்சம் பேர் புகையிலை பயன்படுத்துகின்றனர். இந்த புகையிலை பயன்பாட்டால் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழப்பதாகவும், 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புகையிலை சுவாசிப்பதால் உயிரிழப்பதாகவும்” தெரிகிறது. மேலும், புகை பிடிப்பதால் இந்தியாவில் ஆண்டுதோறும் 10 லட்சம் மரணங்கள் நிகழ்கின்றன. பக்கத்தில் இருந்து புகையை சுவாசிப்பவர்களில் 2 லட்சம் பேர் இறக்கிறார்கள். இந்தியாவில் புற்றுநோய் மரணங்களில் 27 சதவீதம் மரணங்கள், புகையிலை பயன்பாட்டால் ஏற்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
தொற்றுநோய் நிபுணர் இது குறித்து பேசுகையில், “ஹோட்டல், உணவகம், விமான நிலையம் ஆகிய இடங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் புகைபிடிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. அந்த பகுதிகளை ரத்து செய்து, பொது இடங்களில் 100 சதவீத தடை விதிக்க வேண்டும். அப்போது தான் பாதிப்புகளை குறைக்க முடியும் என்றார். புகையிலையில் ஆயிரக்கணக்கான ரசாயனங்கள் இருப்பதாகவும், அதில் குறைந்தது 80 ரசயானங்கள் புற்றுநோயை உண்டாக்குவதாக தெரிவித்தார். இந்த ரசாயனங்களால் 80 விதமான புற்றுநோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். பெண்களுக்கு கூட புகையிலை பழக்கத்தால், கர்ப்பப்பை வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய் ஏற்படுகின்றன” என்றார்