ஜப்பான் நாட்டின் பிரபல காமிக்ஸ் படைப்பாளியான அகிரா டோரியாமா (Akira Toriyama) உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டிராகன் பால்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை படித்து ரசிக்கும் காமிக்ஸ் புத்தகங்களுக்கென தனி ரசிகர் பட்டாளம் பல காலமாக உலகம் முழுவதும் இருந்து வருகிறது. அதில் ஒருவகை தான் ஜப்பானிய “மாங்கா” (Manga) காமிக்ஸ். வித்தியாசமான கலை வடிவமான இந்த மாங்கா, புத்தகங்கள் தொடங்கி கார்ட்டூன்களாகவும் வடிவமைக்கப்பட்டு பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளது.
அப்படி ஜப்பானில் காமிக்ஸ் புத்தகத்தில் தொடங்கி, வெப் சீரிஸ் வரை சக்கை போடு போட்டு வரும் ஒரு படைப்பு “டிராகன் பால்” (Dragon Ball). 1984ஆம் ஆண்டு இந்தக் கதை உருவாக்கப்பட்டது முதல் ஏராளமான அனிம் தொடர்கள், திரைப்படங்கள், வீடியோ கேம்கள் வரை வெளிவந்து சக்கைபோடு போட்டுள்ளன.
அகிரா டோரியாமா
இந்நிலையில், டிராகன் பால் காமிக்ஸ் மற்றும் அனீம் கார்ட்டூன்களின் தந்தையான அகிரா டோரியாமா உயிரிழந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல், உலகம் முழுவதுமுள்ள இந்தத் தொடரின் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
"மாங்கா படைப்பாளியான அகிரா டோரியாமா மூளையில் ஏற்பட்ட ரத்தம் உறைதல் காரணமாக கடந்த மார்ச் 1ஆம் தேதி தன் 68ஆம் வயதில் உயிரிழந்தார் என்பதை உங்களுக்கு வருத்தத்துடன் நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவர் சாதிக்க இன்னும் பல விஷயங்கள் உள்ளன. எனினும் அகிரா டோரியாமா பல மங்கா பட்டங்களையும் கலைப் படைப்புகளையும் இந்த உலகுக்கு விட்டுச் சென்றுள்ளார். 45 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றியுள்ள அகிரா டோரியாமா உருவாக்கிச் சென்றுள்ள படைப்புகளும் தனித்துவமான உலகமும் அனைவராலும் இன்னும் பல ஆண்டு காலம் கொண்டாடப்படும்" என்று டிராகன் பால் காமிக்ஸின் அதிகாரப்பூர்வ X கணக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீய சக்திகளிடமிருந்து பூமியைப் பாதுகாக்கும் போராட்டத்தில் சன் கோகு என்ற சிறுவன் தனக்கும் தன் கூட்டாளிகளுக்கும் உதவுவதற்காக டிராகன்களைக் கொண்ட மாயாஜால பந்துகளைச் சேகரித்து தனது சக்தியை அதிகரிக்கிறான். இந்தக் கதையை மையமாகக் கொண்ட டிராகன் பால் காமிக்ஸ் 40 நாடுகளுக்கும் மேல் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு விற்றுத் தீர்ந்துள்ளது. மேலும் 80 நாடுகளில் இந்த சீரிஸ் வரவேற்பைப் பெற்று ஸ்பின் - ஆஃப் தொடர்களும் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.