அஜித் நடிக்கும் 62-ஆவது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவது உறுதியாகியுள்ளது. அது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அந்தப்படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.  



அந்த அறிவிப்பில், “ அஜித் குமாரின் 62 ஆவது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். சுபாஸ்கரன் தயாரிக்கும் இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த வருட இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும். இந்தப்படம் அடுத்த வருடத்தின் மத்தியில் வெளியாகும்” என்று கூறப்பட்டுள்ளது.


இது குறித்து விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டதாவது: - 









அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படத்தில் ‘அதாரு அதாரு’ பாடல், வலிமையில் ‘நாங்க வேற மாதிரி’ ‘அம்மா’ உள்ளிட்ட பாடல்களை விக்னேஷ் சிவன் எழுதியிருந்தார். இந்த நிலையில் தற்போது இந்தத்தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் விக்னேஷ் சிவன் “காத்து வாத்துல இரண்டு காதல்” படத்தை இயக்கி வருகிறார். இந்தப்படம் வருகிற ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகியுள்ளது. அஜித் ரசிகர்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த வலிமை திரைப்படம் கடந்த மாதம் 24 ஆம் தேதி வெளியானது.


படம் வெளியான அன்றைய நாள், ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்ற இந்தத் திரைப்படத்தை பெரும்பான்மையான திரைப்பட விமர்சகர்கள் கடுமையாக விமர்சனம் செய்திருந்தனர். சிலர் அஜித்தை தனிமனித தாக்குதலுக்கும் உட்படுத்தினர். ஆனால் நாட்கள் செல்ல செல்ல படத்தை பார்த்த பலர் படம் நன்றாகவே இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். படத்தில் பெரும்பான்மையான காட்சிகள், பைக் ஸ்டண்ட் சார்ந்தவை என்பதால், டூப் இல்லாமல் அஜித் ரிஸ்க் எடுத்து அந்த ஸ்டண்டுகளில் நடித்திருந்தார்.


அண்மையில் பேட்டி ஒன்றில் கலவையான விமர்சனங்களுக்கு பதிலளித்த ஹெச்.வினோத் படப்பிடிப்பின் போது, கொரோனாவால் கதாபாத்திர மாறுதல்கள் நிறைய இருந்தது என்றும் நாங்கள் உருவாக்க நினைத்த வலிமை படத்தில் 50 சதவீதத்தை மட்டுமே எங்களால் எடுக்க முடிந்தது என்று கூறியிருந்தார். அஜித் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் அஜித் 61 படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்தப்படம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.