பங்குனி உற்சவ பெருவிழா தமிழகத்தில் உள்ள பல கோயில்களில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பங்குனி உற்சவ விழாவை யொட்டி இந்துக்களுக்கு உகந்த நாளான வெள்ளிக்கிழமை அடுத்து பல்வேறு ஆலயங்களில் இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. அதேபோன்று குலதெய்வ வழிபாட்டுக்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படும் பங்குனி உத்திர விழா இன்று தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
பங்குனி உத்திரம் அன்று முருக பெருமானை மனமுருகி வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது இந்துக்களின் ஆழமான நம்பிக்கையாக உள்ளது. இதைத் தொடர்ந்து பங்குனி உத்திர நாளில் முருகன் கோவில்களில் பக்தர்கள் அதிகளவில் திரண்டு சாமி தரிசனம் செய்வது வழக்கமாக உள்ளதை அடுத்து இன்று முருகன் கோயில்களில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருநகரி கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த 108 திவ்யதேசத்தில் 37 வது திவ்ய தேசமான, ஸ்ரீ அமிர்தவள்ளி தாயார் சமேத கல்யாணரெங்கநாதர் கோயில் அமைந்துள்ளது. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட வைணவக் கோயில் இதுவாகும். இக்கோயில் கோயில் மூலவர் பெயர் வேதராஜன், தாயார் பெயர் அமிர்தவள்ளி நாச்சியார், திருநகரி தலம் திருமங்கை ஆழ்வார் பிறந்த இடமாகும். இக்கோயிலின் இராஜகோபுரம் ஏழு நிலைகளைக் கொண்டது.
கோயில் உற்சவரின் பெயர் கல்யாண ரங்கநாதர் ஆகும். இக்கோயில் வேதராஜன் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோயிலின் பங்குனி பெருவிழா கடந்த 9 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருத்தேரோட்டத்தை முன்னிட்டு கோயிலில் இருந்து ஸ்ரீ அமிர்தவள்ளி தாயார் சமேத கல்யாணரெங்கநாதர் ஒரு தேரிலும், ஸ்ரீ குமுதவள்ளி நாச்சியார் சமேத திருமங்கை ஆழ்வார் மற்றொறு தேரிலும் எழுந்தருளினர். தொடர்ந்து அவர்களுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. முதலில் பெருமாள் தேரையும், அதனை தொடர்ந்து ஆழ்வாரின் தேரையும் திரளான பக்தர்கள் வடம் பிடித்திழுத்தனர். அப்போது பக்தர்கள் பக்தி பரவசத்தில் ரெங்கநாதா, திருமங்கை மன்னா என்று கோஷம் முழங்க தேரை இழுத்து, தேர் நான்கு வீதிகளையும் வலம் வந்து நிலையை அடைந்தது.