மாநகரம் படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான லோகேஷ் கனகராஜ் தனது அழுத்தமான திரைக்கதை மூலம் அனைவரது கவனத்தையும் பெற்றார். தொடர்ந்து கார்த்தியுடன் கைகோர்த்த லோகேஷ் கைதி படத்தை இயக்கினார். ஆக்‌ஷன் படமாக உருவாகியிருந்த இந்தப்படம் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. இந்தப்படத்தை இயக்கிக்கொண்டிருந்தே போதே, அவருக்கு விஜய்க்கு கதை சொல்ல வாய்ப்பு  கிடைத்த நிலையில், அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட லோகேஷ்  ‘மாஸ்டர்’ படத்தை இயக்கினார். 






 


கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியான இந்தத் திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. தனது தனித்துவமான திரைக்கதையால் பல முன்னணி இயக்குநர்களின் பாராட்டைப் பெற்ற லோகேஷூக்கு தொடர்ந்து கமல் நடிக்கும் விக்ரம் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. இயல்பிலேயே கமலின் ரசிகரான இவர் படத்தை இயக்குவதால் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. 






 


விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், நரேன் என பெரிய நட்சத்திர பட்டாளமே இந்தப்படத்தில் நடித்து வருகிறது. அனிருத் இசையமைக்கும் இந்தப்படத்திற்கு சர்கார் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த கிரிஷ் கங்காதரன்  ஒளிப்பதிவு செய்துள்ளார்.


அண்மையில் கமலின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் மேக்கிங் கிளிம்ஸ் காட்சிகளும், ஜூன் 3-ஆம் தேதி படம் வெளியாகும் என்ற அறிவிப்பும் வெளியானது. இந்த நிலையில் இந்தப்படம் பற்றி பேசியுள்ள லோகேஷ் கனகராஜ், “ விக்ரம் படம் 100  சதவீதம் என்னுடைய படமாக இருக்கும். திரைப்படத்திற்கு டீசர், ட்ரெய்லர், இசை வெளியீட்டு விழா என அனைத்தும் இருக்கும்.” என்று பேசியிருக்கிறார்.