நடிகர் அஜித் நடித்துள்ள 61வது படமான துணிவு(Thunivu) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் போஸ்டர் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள நடிகர் அஜித் 3வது முறையாக தயாரிப்பாளர் போனி கபூர் - இயக்குநர் ஹெச்.வினோத் கூட்டணியில் அஜித் நடித்துள்ளார். இந்த கூட்டணியில் முதலில் நேர்கொண்ட பார்வை, கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் வலிமை படம் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதனால் 3வது படத்தை பெரும் எதிர்பார்ப்போடு ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
வங்கி கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இதன் படப்பிடிப்பு ஹைதராபாத், பாங்காங், விசாகப்பட்டினம் உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்றது. இந்த படத்தில் நாயகியாக பிரபல நடிகை மஞ்சுவாரியர் நடித்துள்ள நிலையில் ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
ஏற்கனவே 80 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்து விட்ட நிலையில் மீதமுள்ள படப்பிடிப்பு தாய்லாந்து நாட்டில் நடைபெறுகிறது. இதற்காக படக்குழுவினர் அங்கு சென்று விட்ட நிலையில் அஜித் வரும் செப்டம்பர் 23 ஆம் தேதி அங்கு செல்கிறார். பொங்கலுக்கு படம் வெளியாகலாம் என சொல்லப்பட்ட நிலையில் படம் அறிவிப்பு வெளியாகி 6 மாதங்களை தாண்டிவிட்ட நிலையில் இதுவரை எந்தவித அப்டேட்டுகளும் வெளியாகாமல் இருந்து வந்தது. இதனால் வழக்கம்போல அப்டேட் கேட்டு சமூக வலைத்தளங்களை ரசிகர்கள் முற்றுகையிட்டு வந்தனர்.
இதனிடையே AK 61 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. இதனால் ட்விட்டரில் #AK61FirstLook, #AjithKumar ஆகிய ஹேஸ்டேக்குகள் ட்ரெண்டாக தொடங்கியது. இந்நிலையில் எதிர்பார்த்ததை போலவே AK 61 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்திற்கு துணிவு என பெயரிடப்பட்டுள்ளது. இரண்டுமே ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.