கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே 5 பாசன குளங்களுக்கு தண்ணீர் செல்லும் பொதுப்பணித்துறை கால்வாயை மூடி கல்குவாரிகள் சாலை அமைத்தன. கால்வாயை மீட்டெடுக்க விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தை அடுத்த அண்டூர்பிள்ளை பகுதியில் கோணத்துக்குளம் , புதுக்குளம் பேயோட்டுகுளம் , காராட்டுகுளம் , குரங்கண்ணிக்குளம் உட்பட 5 பாசன குளங்களுக்கு விவசாயத்திற்காக தண்ணீர் கொண்டு செல்லும் கால்வாய் அமைந்துள்ளது. பொதுபணித்துறைக்கு சொந்தமான இந்த கால்வாயை அப்பகுதியில் செயல்பட்டுவரும் தனியார் கல்குவாரிகள் பாறை கழிவுகளை கொண்டு செல்ல கால்வாயை மூடி சாலை அமைத்து கனிம வளகடத்தலில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கால்வாய் மூடப்பட்டது குறித்து அப்பகுதி விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் புகாரளித்ததைதொடர்ந்து வருவாய்த்துறை மற்றும் பொதுபணித்துறையினர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அதைதொடர்ந்து வட்ட அளவையர் மூலம் அளவை பணிகளை செய்தனர்.
இதையடுத்து அளவை பணியோடு நிற்காமல் மாவட்ட நிர்வாகம் விரைந்து செயல்பட்டு 5 பாசன குளங்களுக்கு தண்ணீர் எடுத்து செல்லும் கால்வாய்களை மீட்டெடுக்கவேண்டுமென அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் கால்வாயே இல்லாத நிலையில் 2021-22ஆம் ஆண்டு ரூபாய் ஒன்பதரை லட்சம் ரூபாயில் இந்த கால்வாயை தூர்வாரியதாக அப்பகுதியில் ஊராட்சி ஒன்றிய சார்பில் கல்வெட்டு வைக்கபட்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.