பயணத்தின்போது நடிகர் அஜித்தை தான் சந்தித்தது குறித்து இளைஞர் ஒருவர் பகிர்ந்துள்ள பதிவு அவரது ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.


நடிகர் அஜித்தின் அடுத்த அடுத்த படங்களின் அப்டேட்களை விட அவரது பைக் பயண ஃபோட்டோக்களும் வீடியோக்களும் தான் தற்போதைய இணைய சென்சேஷன்!


தற்போது போனி கபூர் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் AK 61 எனப்படும் பெயரிடப்படாத படத்தில் அஜித் நடித்து வருகிறார். இந்தக் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள நிலையில் படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.




இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகையான மஞ்சு வாரியர் நடிக்கிறார். வரும் 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இப்படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பில் படக்குழுவினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பிலிருந்து முன்னதாக அஜித் லடாக் பயணம் மேற்கொண்டுள்ளார்.


சென்னையிலிருந்து விமானம் மூலம் லடாக் பயணித்து அங்கு பைக் டிராவல் செய்த அஜித்தின் ஃபோட்டோக்களும் வீடியோக்களும் முன்னதாக சோஷியல் மீடியா தளங்களில் லைக்ஸ் அள்ளி வைரலாகின.


அஜித் நண்பர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள், கார்கில் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியது என அனைத்தும் ஹிட் அடித்தன.






இந்நிலையில் முன்னதாக வட மாநிலங்களுக்கு பைக் பயணம் சென்ற இளைஞர் ஒருவர் நடிகர் அஜித் தனக்கு எவ்வாறு உதவினார் என்பது குறித்து தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.


தனது இன்ஸாடாகிராம் பக்கத்தில், "நான் உங்களுடன் ஒரு சம்பவத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 
இந்தச் சம்பவம் ஏதோ ஒரு காரணத்துக்காக தான் நடக்கும் என்பார்கள். அப்படி ஒரு சம்பவம் தான் எனக்கு நடந்தது.


முதன்முறையாக எனது பைக் பயணத்தில் டயர் பஞ்சர் ஆகிவிட்டது. அதனைத் தொடர்ந்து நான் அங்கு உதவி தேடினேன். அப்போது எனது கனவு பைக்கான ஒரு bmw 1250GSA என்னைக் கடந்து சென்றது. நான் அந்த வண்டியை நோக்கி கையை அசைத்து அவரிடம் ஏர் கம்ப்ரஸர் கேட்டேன். 


அதற்கு அவர் பின்னே இருக்கும் வண்டியில் இருப்பதாவும், 10 நிமிடங்கள் பின்னால் அந்த வண்டி வருவதாகவும் அவர் கூறினார்.


தொடர்ந்து அவரிடம் நான் பேச்சு கொடுத்தேன். எனது பெயர் மற்றும் வேலையை சொல்லி அறிமுகம் ஆகிக் கொண்டேன். அவரிடம் பெயர் கேட்டபோது அவர் ”நான் அஜித்!” என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். 




உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி என்று கூறினேன். அதன் பின்னர் கொஞ்சம் கூட யோசிக்காமல் அவரே எனது பைக்கை சரி செய்தார். அடுத்த இரண்டு மணி நேரம் அவருடன் பயணித்தேன்.


பின்னர் தயங்கித் தயங்கி உங்களுடன் ஒரு டீ குடிக்கலாமா? அது எனக்கு ஒரு பாக்கியம் என்றேன். அடுத்த டீக்கடையில் டீ குடித்தோம். தொடர்ந்து 10 நிமிடங்களுக்கு மேல் அவரது முந்தைய ரூட் மேப்பைப் பற்றி உரையாடிய பின், நாங்கள் பயணிக்கும் ரூட்டை கேட்டு எங்களுக்கு வாழ்த்து சொல்லிவிட்டு விடை பெற்றார்.


நான் இந்த சம்பவத்தைப் பதிவிட இரண்டே காரணங்கள் தான்.


1. மிகப் பெரிய மனிதர் ஒருவர் எந்தவொரு பந்தாவும் இல்லாமல் எளிமையான அணுகுமுறையைக் கொண்டிருந்தார்... அவருடைய ரசிகர்கள், மக்கள் மீது அற்புதமான அன்பைக் கொண்டிருக்கிறார்.


2. எனக்கு அதிர்ஷ்டம் அடித்தது. இந்த நாளை என்னால் மறக்க முடியாது. அவர் எனது பார்வையை முற்றிலும் மாற்றினார்” எனப் பதிவிட்டுள்ளார்.


இந்த இளைஞர் அஜித்துடன் எடுத்த புகைப்படங்களையும் இந்தப் பதிவில் பகிர்ந்துள்ள நிலையில், அஜித் ரசிகர்கள் பலரும் அவரது பதிவில் முகாமிட்டு வாழ்த்தி வருகின்றனர்.