தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக உலா வருபவர் அஜித்குமார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. துணிவு படத்திற்கு பிறகு ஏற்பட்ட பல கட்ட சிக்கலுக்கு பிறகு நடிகர் அஜித்தை வைத்து மகிழ் திருமேனி இயக்கியுள்ள படம்.
பொங்கலுக்கு வருகிறதா விடாமுயற்சி?
பல கட்ட சிக்கல்களுக்கு பிறகு அஜர்பைஜான், துபாய் என வெளிநாடுகளிலே இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. நீண்ட நாட்களாக படப்பிடிப்பிலே இருந்த இந்த படம் வெளியாகாது என்று தகவல்கள் வெளியான நிலையில், அடுத்தடுத்து விடாமுயற்சி அப்டேட்களை வெளியிட்டு படக்குழு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்ததால், விடாமுயற்சி படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது விடாமுயற்சி படம் தீபாவளிக்கு பதிலாக பொங்கலுக்கு வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இது அஜித் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லைகா:
இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை என்றாலும் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் இந்த தகவல் தீயாய் பரவி வருகிறது. விடாமுயற்சி படத்தை தயாரிக்கும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனமே வேட்டையன், விஜய் மகன் இயக்கும் திரைப்படம்,, லூசிபர் 2, இந்தியன் 3 ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இதில் வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10ம் தேதி வெளியாக உள்ளது.
லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் கடைசியாக தயாரித்த படங்கள் ஏதும் பெரியளவில் வெற்றி பெறவில்லை. இறுதியாக அவர்கள் தயாரிப்பில் வந்த டான் படம் மட்டுமே மிகப்பெரிய வசூலை குவித்தது. அதன்பின்பு வெளியான எந்த படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெறவில்லை.
கமலுடன் மோதும் அஜித்:
இந்தியன் 2 படமும் எதிர்பார்த்த வசூலை பெறாத சூழலில் ரஜினி, அஜித், மோகன்லால் படங்களையே பெரியளவில் லைகா தற்போது நம்பியுள்ளது. விடாமுயற்சி படம் பொங்கலுக்கு வெளியானால் குட் பேட் அக்லி படம் பொங்கல் வெளியீட்டில் இருந்து தள்ளிப்போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தாண்டு பொங்கலுக்கு மணிரத்னத்தின் இயக்கத்தில் கமல்ஹாசனின் தக் லைஃப் படம் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சில ஆண்டுகளுக்கு முன்பு கமல்ஹாசனின் தூங்காவனம் படத்துடன் வெளியான அஜித்தின் வேதாளம் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.