1999 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான மாஸ் ஹிட் அடித்த ‘அமர்க்களம்’ படம் இன்றோடு 24 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. 


மீண்டும் அஜித் - சரண் கூட்டணி


இயக்குநர் சரண், நடிகர் அஜித் இருவரும் முதல்முறையாக காதல் மன்னன் படத்தில் இணைந்தனர். இன்றளவும் ரசிகர்களின் பேவரைட் ஆக உள்ள அப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இருவரும் ‘அமர்க்களம்’ படம் மூலம் இரண்டாவதாக இணைந்தனர். இந்த படத்தில் ஷாலினி ஹீரோயினாக நடித்தார். மேலும் ரகுவரன், நாசர், அம்பிகா, ராதிகா, வினுசக்கரவர்த்தி, தாமு, சார்லி, ராம்ஜி, பொன்னம்பலம் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். பரத்வாஜ் இசையமைத்த அமர்க்களம் படம், அஜித்தை ஒரு மாஸ் ஹீரோவாக முன்னிறுத்தியது. 


படத்தின் கதை 


பழைய பகையினைத் தீர்ப்பதாக எண்ணி ரகுவரன் சொன்னாதால், ரவுடியாக இருக்கும் அஜித் போலீஸ் அதிகாரியின் மகளான ஷாலினியை கடத்துகிறார். திட்டத்தின் படி கடத்தி சென்று காதலிப்பதாக நடிக்கும் அஜித், ஒரு கட்டத்தில் உண்மையாக காதலில் விழுந்து திருந்த முயற்சிக்கிறார். இந்த பக்கம் கடத்த சொன்ன ஷாலினி தான் தன்னுடைய உண்மையான மகள் என்பது ரகுவரனுக்கு தெரிய வருகிறது. கடைசியில் அஜித் - ஷாலினி ஒன்றிணைந்தார்களா என்பதே இப்படத்தின் கதையாகும். படத்தில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் அஜித், ஷாலினி இருவரும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர். 


ரசிகர்களை கவர்ந்த பாடல்கள் 


அமர்க்களம் படத்திற்கு மிகப்பெரிய பலமாக பரத்வாஜின் பாடல்கள் அமைந்தது. பாடல்கள் அனைத்தையும் வைரமுத்து எழுதினார். இதில், ‘சொந்த குரலில் பாட’ பாடலை நடிகை ஷாலினி பாடியிருந்தார். இந்த பாடலை கேட்டு தான் ஷாலினியை அஜித் காதலிக்க தொடங்கினார். இதேபோல் ‘சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்’ பாடலை மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இடைவிடாமல் பாடுவது போல உருவாக்கப்பட்டிருந்தது. ‘உன்னோடு வாழாத’ பாடல் காதலர்களின் கீதமாக மாறிப்போனது. 


அமர்க்களம் பற்றிய கூடுதல் தகவல்கள் 


முதலில் ஹீரோயினாக நடிக்க ஜோதிகா தான் முடிவு செய்யப்பட்டார். ஆனால் பின்னர் அவர் படத்தில் இருந்து விலகினார். தொடர்ந்து ஷாலினியை  நடிக்க வைக்க சரண் விருப்பப்பட்டார். அந்த நேரத்தில் படித்துக் கொண்டிருந்த ஷாலினி முதலில் மறுக்க, மூன்று மாத காத்திருப்புக்குப் பின் தன் முயற்சியில் சரண் வெற்றி பெற்றார். இதேபோல், ரகுவரன் நடித்த துளசி தாஸின் கேரக்டரில் ஆரம்பத்தில் அமிதாப் பச்சன் தான் கமிட் ஆனார். ஆனால் அவர் விலக, ரகுவரன் நடித்தார். இந்த படத்தில் இடம் பெற்ற சீனிவாசா தியேட்டர் சைதாப்பேட்டையில் உள்ளது.