தமிழ் சினிமாவின் இரண்டு மாஸ் ஹீரோக்களான அஜித் மற்றும் விஜய் படங்களின் ரிலீஸ் என்றாலே ஒரே திருவிழா கோலம் தான். அப்படி இருக்கையில் இருவரின் படமும் ஒரே நேரத்தில் ரிலீஸ் என்றால் அந்த கொண்டாட்டம் குறித்தும், ரசிகர்கள் மத்தியில் இருக்கும் பரபரப்பு குறித்தும் சொல்லவே தேவையில்லை. அப்படி ஒரு பரபரப்பான சூழல் தான் தற்போது தமிழ் ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.
ரீ ரிலீஸ் செய்யப்படும் ராஜாவின் பார்வையிலே :
பொங்கல் ரிலீஸாக வெளியாகவிருக்கும் நடிகர் விஜய்யின் 'வாரிசு' திரைப்படமும் நடிகர் அஜித்தின் 'துணிவு' திரைப்படமும் தான் அதற்கு சரியான எடுத்துக்காட்டு. இப்படி ஒரு சூழல் இருக்கும் சமயத்தில் ரசிகர்களை சந்தோஷப்படுத்த ஒரு புதிய முயற்சி ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. நடிகர் அஜித் மற்றும் விஜய் இருவரும் இணைந்து நடித்த ஒரே திரைப்படம் 'ராஜாவின் பார்வையிலே'. 1995 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தை திரையரங்கில் ரீ ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு இன்று தமிழகம் முழுவதும் வெளியாகியுள்ளது.
போட்டி ரசிகர்கள் மத்தியில் தான் :
உண்மையில் சொன்னால் அஜித் - விஜய் இடையே எந்த ஒரு போட்டியோ அல்லது மோதலோ கிடையாது. ஆனால் அவர்கள் இருவரின் ரசிகர்களுக்கு மத்தியில் தான் இந்த போட்டி மற்றும் மோதல்கள் காணப்படுகின்றன. அந்த வகையில் அவர்கள் இருவரின் நட்பை பறைசாற்றும் விதமாக இருவரும் ஒன்றாக இணைந்து நடித்த 'ராஜாவின் பார்வையிலே' திரைப்படத்தை ரீ ரிலீஸ் செய்வதை கொண்டாடி வருகிறார்கள் ரசிகர்கள்.
வெளியானது வாரிசு டிரைலர் :
அஜித் நடித்துள்ள 'துணிவு' படத்தின் ட்ரெய்லர் கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களின் மத்தியில் அமோகமான வரவேற்பை பெற்றது. துணிவு படத்தின் ட்ரெய்லர் வெளியானதில் இருந்து வாரிசு திரைப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருந்தது. அந்த வகையில் வாரிசு திரைப்படத்தின் ட்ரெய்லர் ஜனவரி 4 ஆம் தேதி வெளியானது. இவ்விரு படங்களும் ஜனவரி 11 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது குறிப்பிடத்தக்கது.