ஒவ்வொரு நடிகருக்கும் அவர்கள் நடிக்கும் அனைத்து படங்களுமே வெற்றி பெற வேண்டும் என்று தான் விரும்புவார்கள். அதிலும் குறிப்பாக 50வது படம் 100வது படம் என ஒரு மைல்கல்லை எட்டுவது என்பது மிக பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. அப்படி தமிழ் சினிமாவின் உச்ச பட்ச நடிகர்களாக விளங்கும் நடிகர் அஜித், விஜய் சேதுபதி மற்றும் தனுஷின் 50வது பற்றிய ஒரு அலசல் இதோ:


 



அஜித் - மங்காத்தா :


வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜுன், வைபவ், பிரேம்ஜி, மஹத், ஆண்ட்ரியா, அஞ்சலி உள்ளிட்ட பலரின் நடிப்பில் 2011ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'மங்காத்தா'. நெகட்டிவ் கதாபாத்திரத்தில் பவர் பேக் பெர்பார்மன்ஸ் உடன் அஜித் நடித்த இப்படம் அவரின் 50வது படமாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் அவரின் திரைப்பயணத்தில் ஒரு திருப்புமுனை படமாக அமைந்தது. 


 




விஜய் சேதுபதி -  மகாராஜா :


நடிகர் விஜய் சேதுபதியின் 50வது படமான 'மகாராஜா ' படத்தை நித்திலன் ஸ்வாமிநாதன் இயக்க அனுராக் காஷ்யப், அபிராமி, பாரதிராஜா, மம்தா மோகன்தாஸ், முனீஷ்காந்த், சிங்கம்புலி, பாய்ஸ் மணிகண்டன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். கடந்த மாதம் திரையரங்கிகளில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதுடன் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான பல வெற்றிப்படங்களில் வரிசையில் மகாராஜா படம் மிக முக்கியமான படமாக முன்னிலை இடத்தை பிடித்தது. 


 



 


தனுஷ் - ராயன் :


தமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவரான நடிகர் தனுஷ் அவரே எழுதி, இயக்கி நடித்துள்ள 'ராயன்' திரைப்படம் அவரின் 50வது படமாக அவரின் கிரீடத்தை மேலும் அழகு படுத்தியுள்ளது.  ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், செல்வராகவன் மற்றும் பலர் நடித்திருந்தனர். பா. பாண்டி படத்திற்கு பிறகு இரண்டாவதாக இப்படத்தை இயக்கியுள்ளார். அலட்டல் இல்லாத யதார்த்தமான நடிப்பால் மாஸ் காட்டி இருக்கிறார் நடிகர் தனுஷ். ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் தனுஷின் இந்த வெற்றிக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள். அவரின் கேரியரில் இது முக்கியமான பங்கு வகிக்கிறது.