வலிமை படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்படுவதாக படத்தின் உரிமையாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான படம் 'நேர்கொண்ட பார்வை'. இந்தப் படத்தைத் தயாரித்து வெளியிட்டவர் நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், தயாரிப்பாளருமான போனி கபூர். 'பிங்க்' படத்தின் ரீமேக்கான இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இதனைத் தொடர்ந்து 'வலிமை' படத்திலும் அஜித் - வினோத் - போனிகபூர் கூட்டணி இணைந்தது.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் அஜித்துடன் ஹுமா குரேஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்ததிலிருந்து எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்ததால் அஜித் ரசிகர்கள் கிரிக்கெட் வீரர்களிடமெல்லாம் வலிமை அப்டேட் குறித்து கேட்டு வந்தனர். கொரோனா, ஊரடங்கு என தொடர்ந்து இடையூறுகளை சந்தித்த வலிமை படக்குழு தற்போதுதான் ரிலீஸுக்கு நெருங்கி வந்தது. இந்நிலையில் மீண்டும் வலிமை படக்குழுவை கொரோனா சோதிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. காரணம், தமிழகத்தில் பாதாளம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த கொரோனா மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. நேற்றைய கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டிய நிலையில், இன்றைய பாதிப்பு அதனைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் நேற்று முன் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து நேற்று கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் ஊரடங்கு விதிமுறைகள் விதிக்கப்பட்டன. ஏற்கெனவே பல மாநிலங்களிலும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டதால் ராஜமவுலியின் ஆர் ஆர் ஆர் திரைப்படம் பின் வாங்கியது. ஆனால் வலிமை பின் வாங்காமல் உறுதியாக நின்றது. இந்த நிலையில்தான் வலிமை படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்படுவதாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் படம் நிச்சயம் திரையரங்குகளில் வெளியாகும் என்பதையும் அவர் உறுதிப்படுத்தி இருக்கிறார்.