நடிகர் அஜித்குமார் நடித்துள்ள துணிவு படத்தில் இடம் பெற்ற சில்லா சில்லா பாடல் ஒரு கோடி பார்வைகளை பெற்று சாதனைப் படைத்துள்ளது. 


வலிமை படத்திற்கு பிறகு தயாரிப்பாளர் போனிகபூர்- இயக்குநர் ஹெச்.வினோத் கூட்டணியில் 3வது முறையாக நடிகர் அஜித் நடித்துள்ள படம் “துணிவு”. வங்கி கொள்ளையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இப்படத்தில் ஹீரோயினாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார்.  ஜிப்ரான் இசையமைத்துள்ள துணிவு படத்தின் திரையரங்க விநியோக உரிமையை நடிகர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 






கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி துணிவு படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியான நிலையில், துணிவு படம் பொங்கலுக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நேற்றைய தினம் முதல் பாடலாக ‘சில்லா சில்லா’ பாடல் வெளியானது. ஆனால் பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியாவதற்கு முன்னால் டிசம்பர் 6 ஆம் தேதியே பாடலின் 10 விநாடிகள் வெளியாகி படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 


இதனிடையே எதிர்பார்த்தப்படி நேற்று பாடல் வெளியான நிலையில், இதற்காக தமிழகம் முழுவதும் பல தியேட்டர்களில் ரசிகர்களுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. வைசாக் எழுதியுள்ள இப்பாடல் வரிகளுக்கு இசையமைப்பாளர் அனிருத் குரல் கொடுத்துள்ளார்.  இந்நிலையில் எங்கு பார்த்தாலும் சில்லா சில்லா பாடல் தான் ரசிகர்களின் ஸ்டேட்டஸ் ஆக சமூக வலைத்தளங்கள் முழுக்க நிறைந்திருந்தது. 






இந்நிலையில் சில்லா சில்லா பாடல் 22 மணி நேரத்திலேயே ஒரு கோடி பார்வைகளை பெற்றுள்ளது. இதனை தயாரிப்பாளர் போனி கபூர் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.