வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. ஏற்கனவே, 2-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை இழந்தது. இதனிடையே, கையில் ஏற்பட்ட காயம் காரணமாக ரோகித் சர்மா நாடு திரும்பினார். இதையடுத்து, கே.எல். ராகுல் தலைமையிலான இந்திய அணி, சிட்டகாங் மைதானத்தில் நடைபெற்ற தொடரின் கடைசி போட்டியில் களமிறங்கியது. போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.


இரட்டை சதம் விளாசிய இஷான் கிஷன்:


இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகார் தவான் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் களமிறங்கினர். தவான் வெறும் 3 ரன்களில் ஆட்டமிழக்க, 2வது விக்கெட்டுக்கு இஷான் கிஷான் மற்றும் கோலி ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் வங்கதேசத்தின் பந்துவீச்சினை நாலாபுறமும் சிதறடித்தனர். கோலி நிலைத்து நின்று ஆட, மறுபுறம் இஷான் கிஷன் ருத்ரதாண்டவம் ஆடினார்.  81 பந்துகளில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தனது முதல் சர்வதேச சதத்தை பதிவு செய்தார்.  இதையடுத்து தனது ஆட்டத்தை இன்னும் விரைவுபடுத்திய இஷான் கிஷான், சிக்சர்களையும், பவுண்டரிகளையும் விளாசினர். இதன் மூலம் வெறும் 126 பந்துகளில் தனது இரட்டை சதத்தை பதிவு செய்தார். இதில் 23 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்சர்கள் அடங்கும்.  அதோடு, தனது இரண்டாவது சதத்தை பூர்த்தி செய்ய அவர் வெறும் 45 பந்துகளை மட்டுமே எடுத்துக்கொண்டார்.






உலக சாதனை படைத்த இஷான் கிஷன்:


இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த முதல் விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பெற்றார். அதோடு, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தனிநபர் அதிகபட்ச ஸ்கோரான, தோனியின் 183 ரன்கள் என்ற சாதனையையும் இஷான் கிஷன் முறியடித்துள்ளார். முன்னதாக, கடந்த 2005ம் ஆண்டு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, ஜெய்பூரில் நடைபெற்ற போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக 145 பந்துகளில் 183 ரன்களை சேர்த்தார். இதுவே, இதுநாள்வரை  ஒருநாள் போட்டிகளில் விக்கெட் கீப்பர்களில் எடுக்கப்பட்ட அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் ஆக இருந்தது. அந்த சாதனையை, 17 ஆண்டுகளுக்குப் பிறகு இஷான் கிஷன் முறியடித்துள்ளார்.






தொடர்ந்து, 210 ரன்கள் எடுத்திருந்தபோது, டஸ்கின் அகமது பந்துவீச்சில் லிட்டன் தாஸிடம் கேட்ச் கொடுத்து இஷான் கிஷன் அவுட்டானார். இதையடுத்து, அவரது அபார ஆட்டத்திற்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். அதோடு, முன்னாள் மற்றும் இந்நாள் கிரிக்கெட் வீரர்களும் இஷான் கிஷனை பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.