தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விக்ரம் மகான் படத்திற்கு பிறகு நடித்துள்ள படம் கோப்ரா. டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களின் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இப்படத்தில் கேஜிஎஃப் படத்தின் கதாநாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் கோப்ரா படத்தில் விக்ரம் பல கெட்டப்புகளில் நடித்துள்ளார்.
இந்த படத்தை செவன்த் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித்குமார் தயாரித்துள்ள நிலையில் இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 2 முறை படத்தின் வெளியீட்டு தேதி தள்ளிப்போன நிலையில் தற்போது ஆகஸ்ட் 31 ஆம் தேதி கோப்ரா வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை விக்ரம் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
தற்போது படத்தின் விளம்பர பணிகளில் படக்குழு மும்மரமாக ஈடுபட திட்டமிட்டுள்ளனர். அந்த வகையில் "கோப்ரா" படக்குழுவினர் ஆகஸ்ட் 23 ஆம் முதல் ஆகஸ்ட் 28 ஆம் தேதி வரை பல்வேறு ஊர்களுக்கும் சென்று ரசிகர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளனர். அதன்படி ஆகஸ்ட் 23 ஆம் தேதியான நேற்று திருச்சி மற்றும் மதுரை, ஆகஸ்ட் 24 ஆம் தேதியான இன்று கோவை மாவட்டம் சென்று ரசிகர்களை சந்திக்கின்றனர். ஆகஸ்ட் 25 ஆம் தேதி சென்னையில் "கோப்ரா" படத்தின் ட்ரைலர் வெளியிடப்படுகிறது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்பு ஆகஸ்ட் 26 ஆம் தேதி கொச்சி, ஆகஸ்ட் 27 ஆம் தேதி பெங்களூரு மற்றும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி ஹைதராபாத் என திட்டமிட்டுள்ளனர்.
இதற்கிடையில் திட்டமிட்டபடி படக்குழுவினர் திருச்சி மற்றும் மதுரையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ரசிகர்களையும் கல்லூரி மாணவர்களையும் சந்தித்து வருகின்றனர். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று காலை திருச்சிக்கு நடிகர் விக்ரம் வந்தார். விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தபோது விக்ரமை காண ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். மேலும் பயணிகள் உள்ளே செல்லும் பாதைக்கும் ரசிகர்கள் சென்று விக்ரமுக்கு மாலை மற்றும் சால்வை அணிவிக்க முற்பட்டனர். இதனால் நிலைமையைக் கட்டுப்படுத்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் தடியடி நடத்தி விரட்டினர்.
பின்னர் கூடியிருந்த நூற்றுக்கணக்கான ரசிகர்களை பார்த்து நடிகர் விக்ரம் கையசைத்தும், முத்தமிட்டபடியும் தனது வாழ்த்துக்களையும், அன்பையும் பரிமாறி விட்டு அங்கிருந்து கார் மூலம் நிகழ்ச்சி நடைபெறும் திருச்சி ஜெயின்ட் ஜோசப் கல்லூரிக்கு விரைந்தார்.
தனது ரசிகர்கள் மீது தடியடி நடத்திய விவகாரத்தினை தெரிந்து கொண்ட நடிகர் விக்ரம் தனது டிவிட்டர் பக்கத்தில், “கோப்ரா திரைப்பட முன்னோட்ட நிகழ்விற்கு திருச்சி வந்த என்னை, வார்த்தைகளால் விவரிக்க இயலா வண்ணம் அன்பு மழையில் நனைய வைத்த என் ரசிகர்களுக்கு என்றும் அன்புக்கு உரித்தானவனாய் என் இதயம் கனிந்த நன்றிகள். அதே வேளையில் சில விரும்பதகாத சூழல் ஏற்பட்டதாக என் கவனத்திற்கு வந்துள்ளது, அத்தகைய நிகழ்விற்கும், அசௌகர்யத்திற்க்கும் என் வருத்தத்தை பதிவு செய்து கொள்கிறேன். இங்கு இவரை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்” என தனது வருத்தத்தினை தெரிவித்துள்ளார்.