ஹேஷ்டேக்… படிக்காத பாமர நபருக்கும் இந்த வார்த்தை இப்போது பரிட்சையமாகிவிட்டது. பிரபல சமூக வலைதளமான ட்விட்டரில் தொடங்கிய ஹேஷ்டேக் வசதி இன்ஸ்டாகிராம், பேஸ்புக் என அனைத்து சமூக வலைதளங்களில் பயன்படுத்தப்படுகிறது. கால்குலேட்டர், போன், கணினியில் எதற்கு இருக்கிறது என்றே பலருக்கும் தெரியாத இந்த ஹேஷ்டேக் (#) தான் தற்போது அதிகம் பயன்படுத்தப்படும் குறியீடாக மாறியுள்ளது.


ஒரு விசயம் குறித்து விவாதப்பொருளாக்கவும், பிரபலப்படுத்தவும், விளம்பரப்படுத்தவும் ஹேஷ்டேக் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தங்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்களை பெண்களே முன்வந்து தெரிவித்த #metoo, சிரியாவில் கொல்லப்படும் குழந்தைகள் அப்பாவிகளுக்காக குரல் கொடுக்க #PrayforSyria, ஜல்லிக்கட்டுக்காக #SaveJallikkattu, #JusticeforAshifa, #SaveFarmers, #NoCAA, #BanNEET, #GoBackModi, #PrayforNesamani, #MigrantWorkers போன்ற ஹேஷ்டேக்குகள் ஊடகங்களின் கவனம் பெற்று தலைப்புச் செய்திகளாக மாறின. அதையும் கடந்து சிலரது தலையெழுத்தையே மாற்றின. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியையும், குற்றவாளிக்கு தண்டனையையும் பெற்றுத் தந்தன. ஹேஷ்டேக் அரசியல் என்ற புதிய சொல்லாடலே தமிழில் தோன்றிவிட்டது.


அதுசரி, 2021-ம் ஆண்டில் இந்திய அளவில் அதிகம் டிரென்டான 10 ஹேஷ்டேக்குகள் எவை தெரியுமா..?


ட்விட்டர் வெளியிட்ட பட்டியலை இப்போது காண்போம். இந்த 10 ஹேஷ்டேக்களில் 4 ஹேஷ்டேக்குகளை உருவாக்கியது தமிழர்கள். அதுவும் 2 நடிகர்களின் ரசிகர்கள். யார் அந்த நடிகர்கள் என்ற கேள்வியே வேண்டாம். அது தல தளபதிதான். நடிகர் விஜய் மற்றும் அஜித்தின் ரசிகர்கள் ட்விட்டரில் செம ஆக்டிவ். எப்போதும் இவர்கள் உருவாக்கும் ஹேஷ்டேக்குகள் இந்திய அளவில் பட்டையை கிளப்பும். இரு நடிகர்களின் ரசிகர்கள் போட்டிப்போட்டுக்கொண்டு ஹேஷ்டேக்குகளை டிரெண்டாக்க டிவிட்டரே அதகளமாகிவிடும்.



  1. வலிமை


இந்திய அளவில் அதிகம் டிரெண்டான ஹேஷ்டேக்குகளில் முதலிடம் பிடித்து இருப்பது வலிமை. அஜித்குமார் நடிப்பில் எச்.வினோத் இயக்கும் இப்படத்துக்கான அடுத்தக்கட்ட தகவலை வெளியிடாமல் படத்தயாரிப்பாளர் போனி கபூர் காலதாமதம் செய்ய ட்விட்டரில் வலிமை அப்டேட் என பொங்கினர் அஜித் ரசிகர்கள். எவ்வளவு கேட்டும் அப்டேட் தராததால் அப்சட்டான அஜித் ரசிகர்கள், பிரச்சாரத்துக்கு சென்ற முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயீன் அலி, சர்வதேச கால்பந்து போட்டி நடைபெறும் அரங்கம் என ஒரு இடம் விடாமல் வலிமை அப்டேட் கேட்டனர். இவர்களின் ஆனந்த தொல்லை தாங்காமல் போதும் போதும் என்றும் சொல்லும் அளவுக்கு போஸ்டர்களை வாரிக் கொடுத்தது வலிமைப் படக்குழு.



  1. மாஸ்டர்


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான மாஸ்டர் திரைப்படம் குறித்த ஹெஷ்டேக்குகள் இரண்டாம் இடத்தில் உள்ளது. பாஜகவினர் எதிர்ப்பு, வருமான வரித்துறை சோதனை என படப்பிடிப்பு படபடப்பாக சென்றது. நெய்வேலியில் பாஜகவினருக்கு எதிராக திரண்ட தனது ரசிகர்களுடன் விஜய் செல்பி எடுக்க அது தாறுமாறாக வைரல் ஆனது. நீண்ட நாட்கள் கொரோனாவால் மூடிக்கிடந்த திரையரங்குகளில் தடை முடிந்து மாஸ்டர் வெளியாகி ரசிகர்களுக்கு செம ட்ரீட் கொடுத்தது.



  1. சர்காருவாரிபட்டா


தெலுங்கு திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின் சர்காருவாரிபட்டா படம் குறித்த ஹேஷ்டேக்குகள் மூன்றாம் இடத்தில் உள்ளன.



  1. அஜித்குமார்


நாம் ஏற்கனவே சொன்னதை போன்று ஏதாவது ஒரு காரணத்தை வைத்து ஹேஷ்டேக்குகளை டிரெண்ட் செய்வது அஜித் ரசிகர்கள் வழக்கம். அதன்படி அவரது படம் குறித்த தகவல்கள், சாதனைகள், பிறந்தநாள், அவர் தேர்தலில் வாக்களிக்க வந்தது, அவ்வப்போது வெளியாகும் அவரது துப்பாக்கிச்சுடுதல், பைக் ரேஸ் படங்களை பகிர்ந்து அஜித்குமார் என்ற ஹேஷ்டேக்கை அவரது ரசிகர்கள் பகிர்ந்து 4-வது இடம் பிடிக்க வைத்துள்ளனர்.



  1. தளபதி 65


மாஸ்டர் படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்க உள்ளார் என்ற அறிவிப்பு வெளியானதிலிருந்தே தளபதி 65 என்ற ஹேஷ்டேக்கை அவரது ரசிகர்கள் டிரெண்ட் செய்தனர். ஆனால், போனி கபூர் போல் அஜித் ரசிகர்களை காக்க வைக்காமல், பீஸ்ட் என படத்துக்கு தலைப்பிட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டது படக்குழு.



  1. ஐ ஹார்ட் அவார்ஸ்


சர்வதேச அளவில் இசைக்காக வழங்கப்படும் ஐ ஹார்ட் ரேடியோ விருதுகள் குறித்து தான் இந்த ஆண்டு உலகம் முழுவதும் பேச்சாக இருந்தது. உலகளவில் டிரெண்டான ஹேஷ்டேக்குகளில் முதலிடம் பிடித்த இது, தல தளபதி ரசிகர்களின் அட்ராசிட்டியால் இந்தியாவில் 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டது


அதுபோல் 7-வது இடத்தில் ரூபினா திலாய்க் என்ற ஹேஷ்டேக்கும், 8-வது இடத்தில் பி.டி.எஸ் ஹேஷ்டேக்கும், 9-வது இடத்தில் கொரோனா தொடர்பாக COVID19 ஹேஷ்டேக்கும், 10-வது இடத்தில் தெலுங்கு நடிகர் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடித்த பிங்க் படத்தின் ரீமேக்கான வக்கீல் சாப் குறித்த ஹேஷ்டேக் இடம்பிடித்துள்ளது.