நேர்கொண்ட பார்வை படத்துக்கு பிறகு வலிமை படத்திலும் அஜித் - வினோத் - போனிகபூர் கூட்டணி இணைந்தது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் அஜித்துடன் ஹுமா குரேஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் அம்மா பாடல் மற்றும் விசில் தீம் உள்ளிட்டவைகள் சமீபத்தில் வெளியாகி அஜித் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. இளைஞர்கள் தங்கள் வாழ்வின் அன்றாடம் சந்திக்கும் ஒரு பிரச்சனையை பெண் ஒருவர் எவ்வாறு எதிர்க்கொள்கிறார் என்பதுதான் படத்தின் கதை என இயக்குநர் ஹச். வினோத் சமீபத்திய நேர்காணல் ஒன்றிலி கூறியிருந்தார். முழுக்க முழுக்க போலிஸ் கதையாக உருவாகியுள்ளது வலிமை என கூறப்பட்ட நிலையில் இயக்குநர் அதனை மறுத்திருந்தார். மேலும் பிரச்சனைக்கு தீர்வு காண அந்த துறையில் மேதையாக இருக்க வேண்டும் என அவசியம் இல்லை. அந்த துறை பற்றி நன்றாக தெரிந்த புத்திசாலியாக இருந்தால் மட்டுமே போதும் என வலிமை படம் குறித்த ஹிண்டையும் கொடுத்திருந்தார் வினோத்.
வலிமை படத்தின் டிரைலர் பிரம்மாண்டமாக எடிட் செய்யப்பட்டுள்ளதாம். அதனை கண்ட படக்குழுவினர் பிரமித்து போகவே அஜித் மட்டும் படத்திற்கான அதீத ஹைப்பாக இருக்கும் என தோன்றுவதாக கூறி இப்போது டிரைலரை வெளியிட வேண்டாம் என ஹோல்ட் செய்து வைத்திருப்பதாகவும் சில செய்திகள் உலா வந்துக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் வலிமை படத்திற்காக அஜித் வாங்கிய சம்பளம் குறித்த செய்திகள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் திரையில் தோன்றினால் மட்டும் போதும் வசூல் வேட்டை நடத்திவிடும் என்ற விரல் விட்டும் எண்ணும் பட்டியலில் அஜித்தின் படங்களும் ஒன்று. அப்படியான நடிகர் தனது படங்களுக்கு எவ்வளவும் சம்பளம் வாங்குகிறார் என்பதுதான் பலரின் கேள்வியாக இருக்கிறது. இந்த நிலையில் அஜித் வலிமை படத்தில் நடிக்க 70 கோடி வாங்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகாத நிலையில் சில நம்பத்தகுந்த வட்டார தகவல்கள் இவ்வாறு தெரிவிக்கின்றன. அது உண்மையாக இருந்தால் கோலிவுட் பக்கம் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்னும் அந்தஸ்தை பெறுவார் அஜித். இதில் மற்றொரு சுவாரஸ்யம் என்னவென்றால் அஜித் பொதவாக தனது படங்களுக்கு வாங்கும் தொகையை விட விஜய் வாங்கும் சம்பளம் அதிகமாம்.
வலிமை படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை முடித்துவிட்டு மீண்டும் அஜித் தனது கால்ஷீட்டை இயக்குநர் ஹெச். வினோத்துக்கே கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த படம் முழுக்க முழுக்க செண்டிமெண்ட் காட்சிகளுடன் உருவாக்கப்பட உள்ளது.