வலிமை படம் வெளியான பின்னர், நடிகர் அஜித்தின் போட்டோக்களும் அடுத்தடுத்த அப்டேட்களும் அதிரடியாக இணையத்தை கலக்கி வருகிறது.
திரையுலகில் கால் அடித்து விட்டாலே, சாதாரண ரோலில் நடிப்பவருக்கு கூட பிரபலம் என்ற பட்டம் கிடைத்துவிடும். அவர்களை பார்ப்பதற்கும், ஒரு போட்டோ எடுத்துக்கொள்வதற்கும் ரசிகர்கள் குவியத்தொடங்குவர். படத்தில் நடிப்பது மட்டுமில்லாமல், அந்த படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளிலும் அவர்கள் ஈடுபவது நடிகர்களின் கடமையாக பார்க்கப்படுகிறது. இதுவரை இங்கு குறிப்பிட்ட அனைத்து விஷயங்களும் இயல்பாக சினிமா உலகில் நடப்பதே. ஆனால்,இதற்கு அப்படியே மாறாக செயல்படும் ஒரே நட்சத்திரம் அஜித் மட்டுமே.
தீனா படத்திற்கு பின்பு இவரை அனைவரும் ‘தல’எ ன்ற அடைமொழியுடன் கூப்பிட ஆரம்பித்தனர். இவருக்கென லட்சக்கணக்கில் இருந்த ரசிகர்கள், பல ரசிகர் மன்றங்களை உருவாக்கி, பால் அபிஷேகம், கட்-அவுட், போஸ்டர் என கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
சினிமாவில் அனைத்து நடிகர்களும் தனக்காக ஒரு பெரிய ரசிகர்கள் கூட்டம் சேராதா? என்று எதிர்பார்த்து கொண்டிருந்த வேளையில், அவை அனைத்தும் தேவையற்றது என்றும் தன் வேலை நடிப்பது, அதற்கு ஏற்ற மரியாதையை மட்டும் கொடுத்தால் போதும், தன்னை தலையில் தூக்கி கொண்டாட வேண்டாம் என்று குறிப்பிட்ட அஜித், அவரவர்களின் பெற்றோர்களையும், குடும்பத்தையும் காப்பாற்றுங்கள் என சொல்லி ரசிகர் மன்றங்களை கலைக்க உத்தரவிட்டார்.
முன்னாள் முதல்வர் கலைஞருக்கு “பாசத்தலைவன்” என்ற விழா நடத்தப்பட்டது. அதில் அஜித் பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்தது. அப்போது அது குறித்து பேசிய அஜித் "பொது இடங்களில் பேசும் போது எனக்கு தோன்றுவதை பேசிவிடுவேன்; பின் அது பிரச்சினையாக மாறிவிடும் என்ற காரணத்தினால், வெளியே பேசுவதை தவிர்த்து வருகிறேன். நான் பேசும் தமிழை பலர் கேலி செய்கின்றனர். ஆங்கிலத்தில் பேசினால், அதற்கும் பல விமர்சனங்கள் வருகிறது. பேசாமல் இருந்தாலும் சர்ச்சைகள் கிளம்புகிறது" என்று அவர் பேசியிருந்தார்.
அத்துடன் “பப்ளிசிட்டி ஸ்ட்ண்ட்” என்பதே தனக்கு வேண்டாம் என ஒதுங்கினார் அஜித். பேட்டி, பட ப்ரோமோஷனுக்கான நிகழ்ச்சி, விருது வழங்கும் விழா என எதிலும் பங்கு பெறாமல் மெளனம் காத்தார். அதனால் இவரை பற்றி கிடைக்கும் தகவல் அரிதிலும் அரிதாகவே இருந்தது. அந்த சமயத்தில்தான் இணையத்தின் தாக்கம் அதிகரிக்க ஆரம்பித்தது.
படங்கள் குறித்த முக்கிய அறிவிப்புகளே மொபைலில் வெளியாக ஆரம்பித்தது. ஏற்கனவே அஜித் பற்றி எதுவும் புது தகவல்கள் கிடைக்காமல் இருந்த ரசிகர்கள் அஜித்தின் பழைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்தனர். அத்துடன் யூடியூப் சேனல்களும் அஜித்துடன் பணியாற்றியவர்களிடம் நேர்காணல்களை எடுத்து, அஜித்தை பற்றிய புதிய தகவல்களை வெளிக்கொண்டு வந்தனர்.
இது இப்படியே சென்று கொண்டிருக்க, அஜித்தின் நடிப்பில் வெளியான ஒவ்வொரு படங்களும் அப்படியே கடந்தது. வலிமை படமும் வந்தது. படம் குறித்தான அப்டேட் எதுவும் நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்த நிலையில், அஜித் ரசிகர்கள் போனி கபூர் தொடங்கி பல பிரபலங்களிடம் வலிமை அப்டேட் கேட்டு தொந்தரவு செய்தனர். அதன் பின்னர், தன்னை ‘தல’ என்று அழைக்க வேண்டாம் என்பதையும், இனிமேல் ஏ.கே, அஜித் அல்லது அஜித் குமார் என்றே அழையுங்கள் என்ற அறிக்கையை வெளியிட்டார் அஜித். அதன் பின்னர் நீண்ட இடைவேளைக்கு பிறகு, ஒரு வழியாக வலிமை படம் வெளியானது. ஆனால் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததால் படம் தோல்வியை சந்தித்தது.
இதனைத்தொடர்ந்து ஹெச்.வினோத்- அஜித்- போனி கபூர் காம்போ மீண்டும் துணிவு படத்தில் இணைந்தது. இந்த படம் குறித்த தகவல் வந்த பின், அஜித்தின் புது புது புகைப்படங்களும், தனிப்பட்ட வாழ்க்கையில் நடக்கும் செய்திகளும் அவ்வப்போது வெளியாகின.
இந்த நிலையில்தான், இவ்வளவு நாளாக அமைதியாக இருந்து வந்த அஜித், ஏன் இப்போது இப்படி தனக்கான ப்ரோமோஷனை செய்து வருகிறார் என்ற கேள்வி எழுந்தது. விஜயை பொறுத்தவரை, அவரின் ரசிகர்களுக்கு அவ்வப்போது தகவல்களை கொடுத்து வந்து எப்போதும் அவர்களை அப்டேட்டாக வைத்திருப்பார். அதனால், இணையத்தில் விஜயின் ரசிகர் கூட்டம், அஜித்தின் ரசிகர் கூட்டத்தை எப்போதுமே ஓவர் டேக் செய்வது இயல்பு. அப்படி இருக்கையில் கடந்த சில மாதங்களாக அஜித் பற்றிய செய்திகள் அடுத்தடுத்து வர, அஜித் ரசிகர்கள் போட்டிப்போட்டுக்கொண்டு போட்டோக்களை ஷேர் செய்தனர். அஜித்தின் இந்த மாற்றம் சமூகவலைதளங்களில் விமர்சனங்களை எழுப்பின.
ரசிகர்களுக்கு அப்டேட் கொடுக்காமல் போனால், நாமும் அப்டேட் இல்லாமல் ஆகிவிடுமோ என்ற எண்ணத்தால், அஜித் இப்படி செய்து வருகிறாரா? அல்லது தயாரிப்பாளர் தரப்பில் இருந்து ஏதாவது வற்புறுத்தல் இருந்ததா? என்பது விளங்கவில்லை என விமர்சகர்கள் பதிவிட்டனர்.
மனைவி மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் போட்டோ, பைக் ட்ரிப் போட்டோ, கன் ஷூட்டிங் செய்யும் போட்டோ போன்ற அஜித்தின் சொந்த விஷயங்கள் தொடர்பான தகவல்களை அவரின் மக்கள் தொடர்பாளர் சுரேஷ் சந்திரா தொடர்ந்து வெளியிட்டார்.
அஜித்திடம் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் ஒரு பக்கம் பாசிட்டிவாகவும் பார்க்கப்படுகிறது. ஆம் தற்போதைய ட்ரெண்டுக்கு மாறியுள்ள அஜித் இனி வரும் காலங்களில் ப்ரோமோஷனில் கலந்து கொண்டால், அது தயாரிப்பாளர்களுக்கும் உதவியாக இருக்கும் என திரை வட்டாரங்கள் பேசுகின்றன. அதுபோக, அது அவரின் ரசிகர்களையும் மகிழ்ச்சிபடுத்தும்.
கலந்து கொள்வதும் கொள்ளாததும் அவரது விருப்பம்; ஆனால் மறைமுகமாக ப்ரோமோஷன் செய்து வருபவர், நேரடியாக ப்ரோமோஷனில் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும் என்பதே இங்கு பலரின் விருப்பம்.