சீனாவில் தொடர் போராட்டம் காரணமாக ஆப்பிள் நிறுவனம் தனது உற்பத்தி ஆலையை சீனாவிலிருந்து வெளியேற்ற திட்டமிட்டுள்ளது. குறிப்பாக சீனாவின் Zhengzhou 'iPhone City' ஆலையில் சமீபத்திய எதிர்ப்புகளுக்கு மத்தியில் உற்பத்தியை சீனாவிலிருந்து வெளியேற்றும் திட்டங்களை ஆப்பிள் நிறுவனம் துரிதப்படுத்தியுள்ளது. ஆப்பிள் தனது உற்பத்தி ஆலையை இந்தியா அல்லது வியட்நாமில் தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.





கொரோனாவால் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக சீனா இருந்து வந்த நிலையில், சீனாவிலும் இயல்பு வாழ்க்கை மீண்டு வந்தது. இந்த நிலையில், சமீப நாட்களாக சீனாவில் கொரோனா வைரசின் பாதிப்பு மீண்டும் ருத்ரதாண்டவம் ஆடத் தொடங்கியுள்ளது.  


அதிகரிக்கும் கொரோனா:


கடந்த சில நாட்களாக சீனாவில் கொரோனா தொற்று பரவல் அதிகமாகி வருகிறது, தினசரி பாதிப்பு 35,000 மேல் உள்ளது. இதனால் சீன அரசாங்கம் கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. சீன அரசாங்கம் விதித்துள்ள கட்டுப்பாடுகளை எதிர்த்து அந்த நாட்டு மக்கள் சாலைகளில் இறங்கி போராடி வருகின்றனர். ஷாங்காயில் போலீசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


குவாங்டங், செங்ஷோ, லாசா உள்ளிட்ட பல பகுதிகளிலும் அரசின் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது. போராட்டக்காரர்கள் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்பதுடன், சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங் பதவி விலக வேண்டும் என்றும் பதாகைகளை ஏந்தி போராடி வருகின்றனர்.


ஆப்பிள் தயாரிப்பு:


வால் ஸ்ட்ரீட் (wall street) ஜேர்னலின் அறிக்கையின்படி, ஃபாக்ஸ்கான் டெக்னாலஜி குழுமத்தின் தலைமையிலான தைவானிய அசெம்ப்லர்களை (taiwanese assemblers) சார்ந்து இருப்பதையும் ஆப்பிள் குறைக்கும் முயற்ச்சிகள் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கிறது.  சீனாவின் Zhengzhou, ஐபோன்கள் மற்றும் பிற ஆப்பிள் தயாரிப்புகளை தயாரிப்பதற்காக Foxconn நடத்தும் தொழிற்சாலையில் சுமார் 300,000 தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள்.


சந்தை ஆராய்ச்சி நிறுவனமான கவுண்டர்பாயிண்ட் ரிசர்ச்சின் கூற்றுப்படி, ஐபோன்களின் புரோ வரிசையில் 85 சதவீதத்தை  இந்த உற்பத்தி ஆலை உருவாக்குகின்றனர் என குறிப்பிடப்பட்டுள்ளது. நவம்பர் மாதத்தில் Zhengzhou நகரில் Foxconn இன் மிகப்பெரிய ஐபோன் ஆலையில் வன்முறை போரட்டங்கள் உழியர்களால் நடத்தப்பட்டது. சமூக ஊடக தளங்களில் பகிரப்பட்ட பல பதிவுகள், சீனா ஐபோன் தொழிற்சாலையில் ஊதியம் மற்றும் நிபந்தனைகளுக்கு எதிராக தொழிலாளர்கள் சாலையில் இறங்கி போராடுவதை காட்டியது.


கடும் கொரோனா கட்டுப்பாடுகள், ஊதிய நிலுவை போன்ற காரணத்தால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   நிலைமை மோசமடைந்ததால், ஃபாக்ஸ்கான் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டு மன்னிப்பு கோரியது. ஆப்பிள் நிறுவனம் இந்த சூழலுக்கு "தொழில்நுட்ப கோளாறு" எனக் கூறியது.  


ஆப்பிள், சமீபத்தில், ஐபோன் 14 ப்ரோ மாடல்களின் ஏற்றுமதி தாமதமாவதை  உறுதிப்படுத்தியது. "COVID-19 கட்டுப்பாடுகள் சீனாவின் Zhengzhou இல் அமைந்துள்ள முதன்மை iPhone 14 Pro மற்றும் iPhone 14 Pro Max உற்பத்தியை தற்காலிகமாக பாதித்துள்ளது, இந்த உற்பத்தி ஆலை  தற்போது கணிசமாக குறைக்கப்பட்ட திறனில் இயங்குகிறது. கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் ஊழியர்கள் நலன் மற்றும் ஆரோக்கியத்திற்கு தான் முன்னிரிமை வழங்கப்படும் என ஆப்பிள் வெளியிட்ட குறிப்பில் தெரிவித்துள்ளது.