Ajith Kumar: அஜர்பைஜானில் விடாமுயற்சி ஷூட்டிங்கில் இருக்கும் அஜித்தை சந்தித்த மகிழ்ச்சியான தருணங்களை தமிழரும், இந்திய அயலுறவு அதிகாரியான பயணிதரன் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். 

விடாமுயற்சி:


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்குமார், மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மீண்டும் அஜித், த்ரிஷா இணைந்து நடிக்கின்றனர். இவர்களுடன் இணைந்து அர்ஜூன் தாஸ், ரெஜினா கசாண்ட்ரா, அர்ஜூன், அருண் விஜய், ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். 

 

கடந்த சில மாதங்களாக படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் நடந்து வருகிறது. அங்கு நடித்து வரும் அஜித்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில், ஷூட்டிங்கில் இருக்கும் அஜித்தை சந்தித்தது குறித்தும், அவருடன் உணவருந்தியது குறித்தும் தமிழரும், அஜர்பைஜானுக்கான இந்திய தூதருமான இந்திய அயலுறவு அதிகாரி பயணிதரன் நெகிழ்ச்சியுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் கூடிய ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். 

 

இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “சென்னையில் சந்தித்ததில்லை. ஆனால், அஜர்பைஜானில் அஜித் அவர்களை நான் சந்திப்பது இது மூன்றாவது முறை. முன்பு அவர் இந்தியத் தூதரகத்துக்கு வந்தபோது நாங்கள் எல்லோருமே அவரது சகா இறந்த துயரத்துடன் அதுகுறித்த முக்கிய வேலையில் இருந்தோம். அப்போதே, யாரிடமோ சொல்லிவிட்டுவிடாமல், அவரே நேரடியாக இறந்தவரின் குடும்பத்தினருடன் இரண்டுமுறை தூதரகத்துக்கு வந்து எல்லா விஷயங்களும் முடியும் வரை இருந்து நடத்தியது எனக்கும் நெகிழ்வாக இருந்தது.

 

இம்முறை “விடாமுயற்சி” படப்பிடிப்பின் இடையில் கிடைத்த ஒரு நேரத்தில் எங்களது மாலை விருந்துக்கு வந்து நிதானமாக இருந்து, எல்லோரையும் அறிமுகப்படுத்தி வைத்து, பிடித்ததைச் சாப்பிட்டு, கதை சொல்லி, கதை கேட்டு, உணவகத்தின் சமையல்காரரை அவரே போய் பாராட்டிவிட்டு வந்து மனதுக்குக் குளிர்ச்சியாய் இருந்தார். ‘தல’ விசிறியான வைதேகிக்கும் அவ்வளவாக விஷயம் தெரியாத எனக்கும் சரிசமமாய் ஈடுகொடுத்து உரையாடினார்.

 

குடும்பம், பிள்ளைகள், மோட்டார்பைக், சைக்கிள் பயணங்கள், பிடித்த உணவுகள் என்று உரையாட இன்னும் நிறையவே இருந்தன. நடிகர்கள் ஆரவ், நிக்கில் ஆகியோரைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. அவர்களின் கலைப்பயணம் சிறக்க வாழ்த்தினோம். படப்பிடிப்புக் குழுவினரும் வந்திருந்ததால், வெளிநாட்டில்—முக்கியமாக அஜர்பைஜானில்—படம் எடுப்பது பற்றியும் நிறையத் தெரிந்துகொள்ள முடிந்தது. எனக்குப் பன்முகத்தன்மை கொண்ட வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து அதற்கான முதலீடு செய்து, அதன் கனிகளை ரசிக்கும் மனிதர்கள் பிடிக்கும். அந்த வகையில் அஜித்தை நிறையவே பிடித்தது.மீண்டும் சந்திப்போம் என்று நம்புகிறோம். மகிழ்ச்சி​” என கூறியுள்ளார்.






 


'விடாமுயற்சி' படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு நிறைவு அடைந்து விட்டதாக கூறப்படுகிறது. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதத்திற்குள் முடிவடையும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படம் இந்த ஆண்டின் இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் அஜர்பைஜானில் நடந்த ஷூட்டிங்கின் போது அஜித்தின் நெருங்கிய நண்பரும், கலை இயக்குநருமான மிலன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.