கடந்த 2014ஆம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்றதில் இருந்து மன் கி பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சி ஒலிபரப்பப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மனதின் குரல் நிகழ்ச்சியின் வாயிலாக இந்திய வானொலியில் நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாடி வருகிறார்.


"ராமரின் நிர்வாகம் உத்வேகமாக அமைந்தது"


அந்த வகையில், 2024ஆம் ஆண்டின் முதல் மனதின் குரல் நிகழ்ச்சி இன்று ஒலிபரப்பப்பட்டது. அப்போது பேசிய பிரதமர் மோடி, "அரசியலமைப்பை உருவாக்கியவர்களுக்கு பகவான் ராமரின் நிர்வாகம் உத்வேகமாக அமைந்தது. கோடிக்கணக்கான மக்களை அயோத்தி ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் விழா ஒருங்கிணைத்தது. அந்த நேரத்தில், நாட்டின் ஒட்டுமொத்த வலிமை தெரிந்தது" என்றார்.


தொடர்ந்து பேசிய அவர், "அதனால்தான் ஜனவரி 22ஆம் தேதி கும்பாபிஷேகத்தின்போது, நான் கடவுள் தொடங்கி தேசம் பற்றியும் ராமர் தொடங்கிய ராஷ்டிரம் பற்றியும் பேசினேன். எல்லோருடைய உணர்வும் ஒன்றுதான். எல்லோருடைய பக்தியும் ஒன்றுதான். எல்லோருடைய வார்த்தைகளிலும் ராமர் இருக்கிறார். எல்லோருடைய இதயத்திலும் ராமர் இருக்கிறார்.


அன்றைக்கு, பலர் ராமர் பஜனைகளை பாடி தங்களை ராமருக்கு அர்ப்பணித்தனர். ஜனவரி 22ஆம் தேதி மாலை நாடு முழுவதும் விளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடப்பட்டது. அந்த நேரத்தில், நாட்டின் கூட்டு பலம் கண்கூடாக தெரிந்தது. இது வளர்ந்த இந்தியாவுக்கான நமது உறுதிமொழியின் அடிப்படையாகவும் அமைகிறது.


"மக்களின் விருதாக மாறிய பத்ம விருதுகள்"


சமீபத்தில் பத்ம விருதுகளால் கவுரவிக்கப்பட்ட பலர், களத்தில் பணியாற்றியவர்கள். பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியவர்கள். கடந்த பத்தாண்டுகளில் பத்ம விருதுகள் வழங்கும் முறை முற்றிலும் மாறிவிட்டது. இப்போது அது மக்களின் விருதாக மாறியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்" என்றார்.


பல துறைகளில் பெண்கள் ஆற்றி பங்கிளை பாராட்டி பேசிய பிரதமர், "பாதுகாப்பு, விவசாயம், விளையாட்டு, சமூக சேவை போன்ற பல்வேறு துறைகளில் பெண்களின் பங்களிப்பைப் பாராட்ட விரும்புகிறேன். 2024 குடியரசு தின அணிவகுப்பின் போது, பாதுகாப்பு படைகளை சேர்ந்த பெண்கள்  தங்கள் தைரியத்தை வெளிப்படுத்தினர்.


உங்களில் பலர் ஆயுர்வேதம், சித்தா அல்லது யுனானி முறை சிகிச்சையை விரும்புபவர்கள். ஒரே மருத்துவ கிளையை சேர்ந்த மருத்துவரிடம் மருத்துவம் பார்த்து வரும் நோயாளி, அதே மருத்துவ கிளையை சேர்ந்த வேறு மருத்துவரிடம் செல்லும்போது பிரச்னையை எதிர்கொள்கின்றனர்.


இந்த மருத்துவ நடைமுறைகளில், நோய்கள், சிகிச்சைகள் மற்றும் மருந்துகளின் பெயர்களுக்கு ஒரே வார்த்தை பயன்படுத்தப்படுவதில்லை. ஒவ்வொரு மருத்துவரும் தங்கள் சொந்த வழியில் நோயின் பெயரையும் சிகிச்சை முறைகளையும் எழுதுகிறார்கள். மற்ற மருத்துவர்களுக்கு இதைப் புரிந்துகொள்வது கடினம். எனவே, ஆயுஷ் அமைச்சகம் ஆயுர்வேதம் தொடர்பான தரவுகளையும் சொற்களையும் வகைப்படுத்தியுள்ளது என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.